பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பட்டுவின் கல்யாணம்

ஸி. சுப்பிரமணிய சாஸ்திரியார் சால்ட் இலாகாவில் 6-ஆவது கிரேட் ஸ்ப் இன்ஸ்பெக்டர். வறண்ட கடப்பை கர்நூல் ஜில்லாக்களின் மலேரியா ஜ்வரம் நிறைந்த மலைப் பிரதேசங்களில் ஈச்சந்தோப்பின் நடுவிலே ஐந்து வருஷ காலம் அரும்பாடு பட்டுவிட்டு, இப்பொழுதுதான் ஒரு சட்டக் கமிஷனர் துரையின் தயவினால் ஆரணி வட்டத்தைச் சேர்ந்த தங்கமான சாலவேடு ரேஞ்சுக்கு மாற்றலாகி வந்திருக்கிறார்.

சாலவேடு ரேஞ்சி, கலால் இலாகாவில் எவரும் விரும்பத்தக்க இனிய இடம். அந்த ரேஞ்சு ஸப் இன்ஸ்பெக்டரென்றால் ஒரு குட்டிக் குபேரனென்றே எவரும் சொல்வர். அங்கே அந்த இலாகா உத்தியோகஸ்தரின் மேல் வரும்படிக்கு அளவே இல்லை. அவரவர் கை நீளமும் துணிவுந்தான் அளவு. பனங்காடென்றால் அங்கேதான் பார்க்க வேண்டும். பல மைல் விஸ்தீரணத்துக்கு லட்சக்கணக்கான பனைமரங்கள் மேகக் கூட்டங்கள் போல வானத்தை மறைத்துக்கொண்டு வரிசை வரிசையாக விளங்கும்.

வறண்ட வடவார்க்காட்டு வனாந்தரத்துக்குப் பனையே செல்வப் புதல்வி. அங்கே அது சர்க்காருக்கு மரமொன்றுக்கு ரூபா 3 வீதம் கொடுக்கிறது. ஏழை ஸால்ட் ஸப் இன்ஸ்பெக்டருக்கும் அது மரமொன்றுக்கு ஓரணா வீதம் பிச்சை கொடுக்கிறது. ஆனால் அந்த ஒரனாவில் பல பேருக்குப் பங்கு உண்டு. கொப்பரைத் தேங்காய்க்குட் புகுந்த கட்டெறும்பு போலக் கள்ளுக்கடை முதலாளிகளை அரிக்கும் கலால் இலாகாச்சேவகர் நால்வர் அந்த ஓரணாவில் காற்பங்கு வீதத்திற்குப் பிறந்தவர்.

சிறந்த வைதிக பரம்பரையில் பிறந்த நம் சாஸ்திரியார், ‘உப்பு இலாகா’ என்று மறை பெயர் பூண்ட கள்ளிலாகாவுக்கு வந்து சேர்ந்ததே காலத்தின் கோலம் தான். அவர் பிரயத்தனம் அதிகமில்லை. அவருடைய வம்சத்தின் பெருமையைப் பார்க்கின் அவர் வேதாந்த சிரோமணியாக வேண்டியவர். ஆனால், சென்ற ஐம்பது வருஷ காலமாக ஆங்கில மதுவை அருந்தி அதில்