பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

சோலை சுந்தரபெருமாள்


பலிக்கவில்லை. பெண்ணைப் பெற்ற தாயின் கவலையைப் பனங்காட்டு நரி போலத் தினந்தோறும் பனந்தோப்புகளில் சஞ்சரிக்கும் சாஸ்திரியார் அறிவாரா?

சுந்தரி, தன் ஆபரணங்களெல்லாவற்றையும் அடகு வைத்தேனும் எப்படியாவது எங்கேயாவது பணம் வாங்கிக் கட்டாயம் கல்யாணத்தை முடித்தே தீர வேண்டுமென்று சாதித்தாள். மனைவி இப்படித் தியாகம் செய்யத் தயாரா இருக்கும்போது எந்தக் கணவன்தான் கம்மா இருக்க முடியும்? ஆகையால் சாஸ்திரியார் துணிந்து ஒரு நாள் சாலவேட்டைவிட்டு, வரன் தேடும் பொருட்டுப் புறப்பட்டுவிட்டார். அதற்குக் கொஞ்ச நாள் முன்னே துரசுவும் தனக்கு அனுப்பியிருந்த ரூ. 50-க்காக 4 ஜாதகங்கள் வாங்கி அவருக்கு அனுப்பியிருந்தான். அந்த ஜாதகங்களையும் சாஸ்திரியார் ஜாக்கிரதையாகக் கையில் எடுத்துக்கொண்டார். சுந்தரியுடனும், பட்டுவுடனும் தம் சேர்ந்த ஊராகிய ஆலங்காட்டுக்கு ஒருநாள் காலையில் வந்து சேர்ந்தார்.

சுந்தரி இதற்கு முன் ஆலங்காட்டுக்கு வந்து வருஷம் பன்னிரண்டாகின்றன. அவள் மாமனார் காலஞ்சென்ற போது வந்து எட்டிப் பார்த்தவள். அவளுக்குத் தன் ஓரகத்தியின் நினைவே நினைவு. அவ்வோரகத்தியோ மலடி. அவளுக்குச் சுந்தரியின் பேரைக் கேட்டாலே போதும்; நெய்யைக் கண்ட நெருப்புப் போலத்தான். நேரே கண்டு விட்டாற் கேட்க வேண்டுமா? அத்தகையவளிடம், தன் பெண்ணின் கல்யாணத்தை உத்தேசித்து எப்படியேனும் பொறுத்துப் போவோமென்று எண்ணியே வந்தாள் சுந்தரி. நல்ல வரன் கிடைத்துக் கல்யாணமும் சரிவர நடந்தேற வேண்டுமேயென்ற திகிலுடன் தன் குலதெய்வத்தை வேண்டிக் கொண்டாள்.


4

வைகாசி, ஆனி மாதங்கள் சாஸ்திரியாருக்கு மிகவும் கஷ்டம்; அலைச்சல். துரசுவும் அவரை ஊரூராய் அழைத்துப் போனான். சாஸ்திரியார் தமது ஜில்லாவைப் பார்த்தே வருஷம் பதினைந்தாகி விட்டன. நாட்டு வழக்கம் ஒன்றும் தெரியவில்லை. எங்கெங்கே பாட்டுக் கச்சேரி, சதிர்க் கச்சேரி, புதுத் தாசிகள் உண்டோ அங்கங்கே வரன் பார்ப்பதற்காகச் சாஸ்திரியாரை அழைத்துச் சென்றான் துரசு; அவரும் பாவம்! அவன் இழுத்த இழுப்பிற்கெல்லாம் ஆளாகி அவன் கூடவே சென்றார். கள்ளுக் காசெல்லாம் காபிக் கடைகளிலும், நாடக மேடைகளிலும் தொலைந்தது. ஒழிந்த வேலையில் ஜாதகங்களைப் பொறுக்கிச் சோதிடன் இடம் காட்டிப்பார்த்தார்கள். ஜாதகம் பொருந்துவது இல்லை. விஷயம் இவ்வாறாகக் குழந்தை பட்டுவுக்குப் புருஷனே பிறக்கவில்லையோவென்று கூடச் சாஸ்திரியாருக்குத் தோன்றியது.