பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தஞ்சைச் சிறுகதைகள்

23

சாஸ்திரியார் கையிலிருந்த ரூபாய் 500-ல் பெரும்பாலும் செலவழிந்து விட்டது. திரும்பிச் சாலவேடு போகச் செலவுக்கு ரூபா 50-தான் பாக்கி. ஆனி மாதம் தேதி 22 ஆகிவிட்டது. வரன் ஒன்றும் நிச்சயமாகவில்லை. “வரன் தேட ஒரு வருஷ வரும்படியைச் செலவிட்டாலும் முடியாது போலிருக்கிறதே. என்னடா இது! விவாகமென்னும் இன்பமயமான உயர்ந்த சடங்கு, இவ்வளவு கஷ்டம் உடையதாய்க் கேவலமாகி விட்டதே. சர்க்கார் உத்தியோகஸ்தனின் பெண்ணுக்குக் கல்யாண மென்றால் சாத்தியமில்லாத விஷயம்போல் இருக்கிறது” என்று சாஸ்திரியார் கவலையில் ஆழ்ந்தார்.

5

சாஸ்திரியார் துயரத்துடனும், கவலையுடனும் ஆனி 25 ஆலங்காட்டுக்குத் திரும்பி வந்தார். குழந்தை பட்டு, வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்தாள். தகப்பனாரைக் கவலையுடன் கடைக்கண்ணால் பார்த்தாள். அப்பார்வை அவர் இதயத்தில் காய்ச்சிய வேல்போல் பாய்ந்தது.

சாஸ்திரியின் தமையனார் உள்ளிருந்து வெளியே வந்து தம்பியை வரவேற்று, அவர் கையில் நீண்ட உறையிட்ட ஒரு சர்க்கார்த் தபாலைக் கொடுத்து விட்டுக் கண்களைச் சிமிட்டிக் கொண்டு பேசலானார். “சுப்பு, என் மேல் கோபித்துக் கொள்ளாதே. நான் தயாராய் இருக்கிறேன். 5000 கீத்து, 100 சவுக்குக்கால் கொட்டகைப் பந்தலுக்குத் தயாராயிருக்கின்றன. மேளகாரன், சமையற்காரர்களுக்கு அச்சாரம் கொடுத்துவிட்டேன். பூதலூர்ப் பையன்தானே நிச்சயம் செய்திருக்கிறாய்? நல்ல இடம் தான். ஆனால் நம் அந்தஸ்துக்கு மிகவும் மேற்பட்டது. 31 முகூர்த்தந்தானே?”

தமையனாருக்குத் தம்பியிடம் அபிமானம் அதிகம் ! தம்பியின் முகத்தைப் பார்த்தவுடனேயே சமாசாரம் தெரிந்து கொண்டுவிட்டார். சர்க்கார்க் கடிதத்தையும் இரகசியமாய்ப் பிரித்துப் பார்த்து விஷயந் தெரிந்து கொண்டிருந்தார்.

சர்க்கார்க் கடிதம் பின்வருமாறு: -

‘சுப்பிரமணிய சாஸ்திரி, ஆறாவது கிரேட்டு சப் இன்ஸ்பெக்டர், சாலவேட்டிலிருந்து மூலக்காடு ரேஞ்சுக்கு மாற்றல், லீவு முடிந்ததும் அங்கே போய் வேலை ஒப்புக் கொள்க.”