பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கல்கி

இன்றைய மயிலாடுதுறையிலிருந்து பத்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ள புத்தமங்களத்தில் பிறந்த ரா. கிருஷ்ணமூர்த்தி எல்லோராலும் “கல்கி" என்று அன்போடு அழைக்கப்படுகிறவர். அவர் தமிழுக்கு செய்திருக்கும் பங்கு குறிப்பிடத்தக்கது.

கல்கி ஒரு சிறந்த பத்திரிகையாசிரியர் என்று குறிப்பிட்ட க.நா.சு. “தமிழில் வாசிப்பவர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு உயர்வதற்குப் பலர் உதவியிருக்கிறார்கள். அவர்களில் யாரும் கல்கி உதவிய அளவுக்கு உதவியதில்லை என்று சொல்லவேண்டும்” என்று கூறியுள்ளதை மேம்போக்காக விட்டு விடக்கூடாது.

“1925-35 ஆண்டுகளின் இடைக்காலத்தில் எழுத்தாளர் கல்கி தோன்றி நவசக்தி, விமோசனம், ஆனந்தவிகடன் பத்திரிகைகள் மூலம் சிறுகதைக்கும் அதன் இயக்கத்திற்கும் ஊக்கமளித்ததைக் குறைத்து மதிப்பிட முடியாது. அவரின் சிறுகதைகளின் சிறப்பை அவற்றின் வடிவத்தில் காண முடியாது என்றாலும் சில கதைகளில் உத்தி குறிப்பிடத்தக்கதாக இருக்கும். ஆனால் இந்த உத்தி ஒரே மாதிரியாய் பல கதைகளில் தென்படும். ஒஹென்றியின் தாக்கம் அதிகம் காணப்படும். ஒரு நண்பன் அல்லது ரயில் பயணி, கதை சொல்லுவது போல் அமைப்பதிலும், வடிவம் உருவாவதற்கும் ஒருவாரு முயன்று இருக்கிறார் என்று சொல்லலாம். இலக்கிய வடிவ அடிப்படையில் அவருக்குச் சிறுகதை நன்றாக கைவந்தது என்று சொல்வதற்கில்லை. அவருக்கிருந்த இயல்பான நகைச்சுவை, உள்ளடக்கத்தின் முக்கியத்துவத்தைப் பாதித்து விடுகிறது”... என்று சிட்டி சிவபாதசுந்தரம் குறிப்பிடுகிறார்கள்.

ஒற்றை ரோஜா, காரிருளில் ஒரு மின்னல், அலையின் கண்ணீர், மாடத் தேவன்களை, மயில்விழி மான், வீணைபவானி, மயிலைக்காளை, ஸ்வப்பன் லோகம், ஜீவரசம், கணையாழியின் கனவு, தாரகையின் தந்திரம் போன்ற கதைகள் குறிப்பிடும் படியானவை.

தமிழில் வரலாற்று நாவல் என்று எத்தனையோ பேர் எழுதிக் குவித்தாலும் இவர் எழுதிய சிவகாமியின் சபதமும், பொன்னியின் செல்வனுந்தான் தமிழில் தமிழரின் உள்முகத்தோடும், புறத்தன்மையோடும் வெளிவந்தவை என்று சொல்லலாம். கல்கி, நாவலில் செய்த சாதனையை சிறுகதையில் செய்துள்ளாரா? என்று யோசிக்கும் போது இல்லை என்ற விடைதான் கிடைக்கிறது.