பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

சோலை சுந்தரபெருமாள்


ரயில் ஒடிய போது சிந்தனையும் வெகுதுரம் ஓடிற்று. தாமரைவேலி! ஆஹா! என்ன அழகான பெயர்! ஊரும் அத்தகைய அழகாகத்தான் இருக்கும். பக்கத்திலே சல சலவென்று ஜலம் ஓடிக்கொண்டிருக்கும் ஆறு, தாமரையும், அல்லியும் பூத்திருக்கும் பெரிய குளம், தென்னந்தோப்புகள், மாமரங்கள், வாழைத்தோட்டங்கள்; வீடுகள், இரண்டு சிறு கோவில்கள், ஆகா படிப்பதற்கு எவ்வளவு அமைதியான இடம்? சாப்பாட்டைப் பற்றிக் கவலையில்லை. ஹோட்டல் இராதென்பது உண்மையே. அதனால் என்ன மோசம்? ஒரு வீட்டிற்குள் தைரியமாக நுழைந்து சாப்பாடு போடும்பபடிக் கேட்கலாம். விஷயத்தைச் சொன்னால் சந்தோஷமாகப் போடுவார்கள்.

“லொடக்” என்று ஆடிக்கொண்டு ரயில் நின்றது. அவசர அவசரமாக வண்டியை விட்டுக் கீழே இறங்கினேன். என்ன ஏமாற்றம். எல்லாம் வெறும் ஆகாசக் கோட்டையாக முடிந்தது. ஆறு இருந்தது; தண்ணீர் இல்லை, குளம் இருந்தது. தாமரையும், அல்லியும் இல்லை. தென்னைமரம் இருந்தது. ஆனால் சமீபத்தில் இடி விழுந்திருக்க வேண்டும். எனவே மட்டையாவது தேங்காய் குலையாவது இல்லாமல் மொட்டையாய் நின்றது. மாமரம் பெயருக்கும் இல்லை. புளியமரம் ஏராளம். கோவில் ஒன்றிருந்தது. ஆனால் இடிந்து பாழாய் கிடந்தது. நந்தவனத்துக்குப் பதிலாக எங்கெங்கும் குப்பைமேடுகளாய் காணப்பட்டன. ஒரு கள்ளுக்கடை, ஒரு காப்பி ஹோட்டல், ஒரு போலீஸ் ஸ்டேஷன், ஒரு சுருட்டுக்கடை, ஒரு பள்ளிக்கூடம், பள்ளிக்கூடத்தில் உபாத்தியாயர் “அர்ரிதமெட்டிக்” என்று அழுத்தந்திருத்மாய் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். ஆயினும் நான் தைரியத்தைக் கைவிடவில்லை. அடுத்த ரயில் வரும் வரையில் கிராம வாசம் செய்தே தீருவதென்று தீர்மானித்தேன். வேறு வழியும் இல்லை.

என்னதான் இருந்தாலும் கிராமம். ஆகா! எவ்வளவு விஸ்தாரமான மைதானம்? என்ன அழகான அருகம்புல்? எவ்வளவு நேர்த்தியான மண் ? அப்புறம் இதோ, தெரியும் சப்பாத்திக் கள்ளி இவையெல்லாம் காணக்கிடைக்குமா? அவசரப்பட்டு கிராம வாழ்க்கை ‘வெறும் ஹம்பக்’ என்று தீர்மானித்தது பிசகுதான். எப்படியும் இந்தப் புல் நிறைந்த மைதானத்தில் சிறிது நேரம் உட்கார்ந்து அமைதியாகப் படிக்கலாம். ஆனால் அதற்கு முன்னால் கொஞ்சம் தாகத்துக்குச் சாப்பிட வேண்டும். தொண்டை வரளுகிறது. காப்பி கிளப்புக்கு ‘சை’ கிராமத்துக்கு வந்தும் காப்பி கிளப்பா? ஏதாவது ஒரு வீட்டுக்குள் நுழைந்து கெஞ்சம் மோர் வாங்கிக் குடித்துவிட்டு வரலாம்.