பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தஞ்சைச் சிறுகதைகள்

29


ஸ்டேஷனுக்குப் போனேன். இப்போதுதான் ஒரு வண்டி போயிற்றென்றும், அடுத்தவண்டி வர இன்னும் மூன்று மணி நேரம் ஆகுமென்றும் சொன்னார்கள். “அட தெய்வமே” என்று எண்ணியவனாய் ஸ்டேஷனில் இருந்த கடையில் வாழைப்பழம் வாங்கிக்கொண்டு சமீபத்தில் புல் முளைத்திருந்த ஒரு மைதானத்தில் போய் உட் கார்ந்தேன். வானம் மப்பும் மந்தாரமுமாய் இருந்தது. ஏதோ வந்ததற்கு சிறிது நேரம் அமைதியாய்ப் படிப்போம் என்று எண்ணினேன். அதற்கு முன் மருந்துப்புட்டியை எடுத்து ஒருமுறை பார்த்தேன். பெருமூச்சுடன் அதைக் கீழே வைத்துவிட்டு டார்வின் புத்தகத்தைக் கையில் எடுத்துப் படிக்கத் தொடங்கினேன். ஜீவ வர்க்க பரிணாமத்தைப் பற்றியும் குரங்கிலிருந்து மனிதன் எப்படிப் பிறந்தான் என்பதைப் பற்றியும் வெகு ரசமாகச் சொல்லப்பட்டிருந்தது.

அந்த ரசத்தில் சொக்கில் போன எனக்கு ஆனந்தமான நித்திரை வந்தது.

“சை? தூங்கக்கூடாது!” என்று எண்ணி நான் கண்ணைக் கசக்கியபோது சமீபத்தில் காலடி சத்தம் கேட்டது. நிமிர்ந்து பார்த்தேன். எதிரில் யார் வந்ததென்று நினைக்கிறீர்கள்? புத்தகத்தில் யாரைப் பற்றி படித்துக் கொண்டிருந்தேனோ அந்த சாஷாத் ஆஞ்சனேயப் பெருமாள்தான். குரங்குடன் மனிதன் ஒருவனும் கூட வந்தான். அவன் கழுத்தில் ஒரு பழைய ஹார்மோனியப் பெட்டி தொங்கிக் கொண்டிருந்தது. குரங்கு, சட் டையும் குல்லாவும் அணிந்திருந்தது. “இந்தப் பிராணியிடமிருந்தா நாம் எல்லாரும் பிறந்தோம்? டார்வினும் ஒரு பெரிய பைத்தியக்காரன் போலிருக்கிறதே” என்று நான் எண்ணினேன்.

“குட்மார்னிங் சார்!” என்றான் குரங்காட்டி. அவனுடைய குரங்கு என்னை வெகுவாகக் கவர்ந்துவிட்ட தென்பதை அவன் எப்படியோ கவனித்திருக்க வேண்டும்.

“அனுமார்! ஐயாவுக்கு சலாம் போடு!” என்றான். அனுமார் சலாம் போட்டது.

“ஐயாவுக்கு வாத்தியம் கேட்கப் பிரியமா? என்று கேட்டான் அந்த மனிதன்.

“இல்லை” என்று அழுத்தம் திருத்தமாக சொன்னேன். ஹார்மோனியம் என்றாலே எனக்குப் பிடிக்காது. அதிலும் நான் வசித்த ஹோட்டலுக்கு அடுத்த வீட்டிலிருந்த ஹார்மோனியம் என் படிப்பைக் கெடுப்பது போதாதென்று இங்கு அமைதியாகப் படிக்க வந்த இடத்திலுமா?

“ஐயா, அனுமாருக்குக் காலனா கொடுப்பாரு. நான் வாத்தியம் வாசிப்பேன்” என்றான் மனிதன்.

“இரண்டும் இல்லை” என்றேன் நான்.