பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தஞ்சைச் சிறுகதைகள்

33


வருகிறதென்று அறிந்தேன். குரங்கு காட்டுமனிதனாகி காட்டு மனிதன் இக்கால மனிதனாகி இக்கால மனிதன் வருங்கால மனிதன் ஆகிவிட்டான். இப்போது அவனைக் கண்டதும் என்னையறியாமலே பயபக்தி உண்டாயிற்று.

“மன்னிக்க வேண்டும்” என்னும் சொற்கள் என் வாயினின்றும் தாமே வெளிவந்தன. எதற்காக மன்னிக்க வேண்டுமென்பது எனக்கே விளங்கவில்லை:

வருங்கால மனிதன் கிழே விழுந்த புத்தகத்தை எடுத்துப் பார்த்துவிட்டுச் சொன்னான்; ஓ! டார்வின் இயந்திர யுகத்தைச் சேர்ந்தவன். நமது வளர்ச்சியை ஒருவாறு அப்போதே சொன்னான். ஆயினும் அக்காலத்து மக்கள் எல்லோரும் பொதுவாக மூடர்கள். எனவே ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டே செத்தார்கள்!”

“உண்மை வாஸ்தவம்” என்றேன். இவ்வளவு மூளைக் குழப்பத்தினிடையே ஒரு சந்தோஷம் ஏற்பட்டது. வருங்கால மனிதர் தமிழ் மொழி பேசுவார்கள் என்பதில்தான் அந்த சந்தோஷம் ஏற்பட்டது.

மீண்டும் சட்டென்று எனக்கு ஓர் அரிய யோசனை தோன்றிற்று. வருங்காலத்தைப் பற்றி இந்த வருங்கால மனிதன் கூறுவதையெல்லாம் எழுதி வைத்துக் கொண்டால் நல்லதல்லவா? அப்படி செய்து கெண்டால் கலாசாலை ஆசிரியர்களைக் கூட ஓட ஓட விரட்டலாம். உடனே நோட்டுப் புத்தகமும், பென்சிலும் சட்டைப் பையிலிருந்து எடுத்துக் கொண்டேன்.

“ஓகோ எழுதும் கலை. இது மறந்துபோய் இரண்டு லட்சம் ஆண்டு கழிந்து விட்டதல்லவா?” என்று கூறி வருங்கால மனிதன் வியப்புடன் நோக்கினான்.

பிறகு சட்டென்று ஓர் எண்ணம் உதயமானவனைப் போல் என்னை உற்றுப்பார்த்து, “நீ யார்? என்று கேட்டான்.

விஞ்ஞானப் புலவர்கள் ஒரு வண்டு அல்லது தேனீயை நோக்குவது போல் அவன் என்னை ஆராய்ச்சிக் கண்ணுடன் பார்க்கத் தொடங்கினான். உடனே எனக்கு அளவில்லாத பீதி உண்டாயிற்று, நல்ல வேளை! அவன் முன்போல் காட்டு மிராண்டி மனிதனாயில்லை. தப்பித்து ஓடிப் போகலாம்! .

எழுந்து ஓடினேன். ஆனால் சில அடி தூரம் போவதற்குள் என் கால்கள் தாமாகவே நின்றன. விரும்பமில்லாமல் திரும்பிப் பார்த்தேன். வருங்கால மனிதன் இருந்த இடத்திலேயே இருந்தான். ஏதோ கண்ணுக்குப் புலனாகாத சக்தி என்னைப் பிடரி பிடித்துத் தளிக் கொண்டு போய் அவன் எதிரில் உட்கார வைத்து தேகபலத்தை அவன் இகழ்ந்து கூறியதன் கருத்து எனக்கு இப்போது நன்கு விளங்கியது.