பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

சோலை சுந்தரபெருமாள்


வாழ்ந்து வந்தனர். ஏனெனில் அவர்களுடைய வாழ்க்கைத் தேவைகள் அதிகம் இல்லை. கல்யாணம் முதலியன மிகச் செட்டாக நடைபெற்றன. விலைபெற்ற ஆடைகள் அவர்கள் அணிந்ததில்லை. தங்க நகைகள் சில வீடுகளில் மட்டுமிருந்தன. ஏழைக் குடியானவர்கள் வீட்டில் மண்பாத்திரங்கள் புழங்கி வந்தன. வெள்ளிக்காப்புகள் சில வீடுகளில் உண்டு. கள்ளுக்கடை அந்த ஊரில் இல்லை. இருக்கிறவர்கள் இல் லாதவர்களுக்கு கொடுத்து உதவி எப்படியோ பொதுவாழ்க்கையில் அதிகமாக மேடுபள்ளமில்லாமல் நடத்தி வந்தார்கள். இவ்வாறு வெளியுலகத்தை அதிகமாக ஏறிட்டுப் பார்க்காமல் வாழ்க்கை நடைபெற்று வந்த புளியந்தோப்பில், சோமதேவ சாஸ்திரிகள் என்று ஒருவர் இருந்தார். அவர் பரம்பரை வைதீகக் குடும்பத்தைச் சேர்ந்தவர். சோமதேவரின் பாட்டனார் காலத்தில் அவருக்கு மூன்று ஏகரா நிலம் அரசனால் சன்மானம் கொடுக்கப்பட்டது. மானியமாய் வந்த நிலத்தைக் கொண்டும் வித்வான் என்ற பெயரினாலும் அவர் திருப்திகரமாய் இல்லறம் நடத்தி வந்தார்.

அவருக்குப் பெரிய வீடு இல்லை. இல்லறம் இனிது நடத்திய சோமதேவரின் பாட்டனாருக்கு மூன்று ஆண் குழந்தைகள் பிறந்தனர். அவர்களில் ஒருவர் தான் சோமதேவரின் பிதா, சோமதேவரின் பிதாவுக்கு அவரது தகப்பனாரின் மூலமாய் மூன்று சாஸ்திரங்களில் தேர்ச்சி கிடைத்ததாயினும், பூமியில் பூர்வ சொத்தான மூன்று ஏகரா நிலத்தில் மூன்றில் ஒரு பங்கு (ஒரு ஏகரா) பாகமாய் கிடைத்தது. ஒரு ஏகரா நிலத்தையும், தனது மூன்று சாஸ்திரப் பயிற்சியையும் கொண்டு, அவர் இல்லறம் நடத்தத் துணிந்தார். குடியிருப்பு விட்டில், அவருக்கு மூன்றிலொரு பங்கு.

சோமதேவ சாஸ்திரிகளும், மூன்று சகோதரிகளும் அவர்களது பிதாவுக்குப் பிறந்தனர். இவர்கள் குழந்தைகளாயிருக்கும் பொழுதே, புளியந்தோப்பின் பழைய நிலைமை மாறத் தலைப்பட்டது. தங்க நகைள் ஏற்பட்டுவிட்டன. ரூபாய்கள் தோன்றின. நோட்டுகளும் வந்து விட்டன. போதாக்குறைக்கு மதுபானக்கடையும் ஸ்தாபிக்கப் பெற்றது. சோமதேவ சாஸ்திரிகளுக்கு சமஸ்கிருதத்திலேதான் பயிற்சி. அவருடைய மூன்று சகோதரிகளும் தங்கள் புக்ககம் செல்லுமுன்னரே, தங்கள் பிறந்த வீட்டு பூமி ஒரு ஏகராவும் விலை போகும்படியாயிற்று காலம் மாறின விந்தை அது. நாகரிகம் தோன்றிய மயக்கால் நகைகளுக்கு ஆசை பெண்களின் உள்ளத்தில் உண்டாயிற்று. சீர் வரிசைகள் சரியாய்ச் செய்யாவிடின், பெண்களுக்குக் கல்யாணம் செய்ய முடியாதோவென்று பெற்றோர்கள் மனம் ஏங்கும் காலம்