பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தஞ்சைச் சிறுகதைகள்

39


வந்துவிட்டது. சோமதேவ சாஸ்திரிகளின் வீட்டில் தரித்திரம் இவ்வளவு தாராளமாய் விளையாடி வந்தபோதிலும், அவருக்கும் பரம்பரை மாமூலையொட்டி கல்யாணம் நடைபெற்று விட்டது.

“எனக்கு ஏற்பட்டது கலியாணம் இல்லை. எனக்குக் கட்டை கட்டி விட்டார்கள்” என்று அலுத்துக் கொண்டு சொல்லுவார் சோமதேவ சாஸ்திரிகள். கலியானமாயிற்று என்றால் குழந்தைகள் பிறந்தனவென்று சொல்லவும் வேண்டுமா? தரித்திரனுக்குச் சோற்றுக்குப் பஞ்சமே அன்றி, குஞ்சுகளுக்குப் பஞ்சமில்லை என்று கிராமத்தார் சொல்லிக் கொள்ளுவது உண்டு. அதுபோல சோமதேவ சாஸ்திரிகளுக்கு மூன்று ஆண் குழந்தைகள், நான்கு பெண் குழந்தைகள். குழந்தைகள் பிறக்கப் பிறக்க சாஸ்திரிகளின் வயிற்றில் இடி விழுந்தது போலாயிற்று.

“மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான்” என்று நொண்டித் தத்துவத்தைக் கொண்டித்தனமாய்ப் பேசிக் கொண்டிருந்தால், வாயில்லாக் குழந்தைகள் வளர வேண்டாமா? என்ன செய்வார் பாவம்? அவர் காலத்தில் சோமதேவ சாஸ்திரிகள் கற்ற வித்தைக்கும் அவர் தரித்திருந்த சாஸ்திரிகள் என்ற பட்டத்துக்கும் விலையுமில்லை, கெளரவமும் கிடையாது. அறிவு விற்பனைப் பொருளாய் வேண்டப்பட்டாலன்றி, அறிவாளி பிழைப்பது எங்ஙனம்? மேலும் சாஸ்திரிகள் படித்த படிப்பு பயன்படக்கூடாத காலம் வந்துவிட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நிச்சயமாய் ஒரு புதுக் குழந்தையை வீட்டில் எதிர்பார்த்த சாஸ்திரிகள் வெளியே போய் சம்பாதிக்கும் இயல்பில்லாதவராகவும் ஆகிவிட்டார். எனவே சாஸ்திரப் பயிற்சியை மூட்டை கட்டி வைத்துவிட்டு, பக்கத்துக் கிராமங்களில் பிச்சை எடுக்கத் துணிந்து விட்டார். இவ்வாறு அவரது குடும்ப காலட்சேபம் நடைபெற்று வந்தது.

தான் கெட்டது போல தனது குழந்தைகளும் கெடலாகாது என்று எண்ணி, சாஸ்திரிகள் தனது பிள்ளைகளை வடமொழிக் கல்வியில் பழக்கவில்லை. நாகரிக முறையில் நவீன அறிவும், ஆராய்ச்சியும் பெறுதற் பொருட்டு தனது பையன்களை ஆங்கிலப் பள்ளிக்கு அனுப்பி வந்தார். அவ்வாறு ஆங்கிலம் கற்றவர்களில் ஒருவன் நாராயணன். இவன் சோமதேவ சாஸ்திரிகளின் நடுப்பிள்ளை. ஆங்கிலம் சிறிது கற்றுக்கொண்டான். அதிகமாகக் கற்றுக்கொள்ள அவனுடைய குடும்பத்தின் வறுமை இடங்கொடுக்கவில்லை. தான் பிழைப்புத் தேடினாலன்றி, தனது குடும்பம் அழிந்துபோகும் என்று அறிந்து கொண்ட நாராயணன் வேலைக்கு அலைந்தான். எந்த வேலைக்குத் தான் தகுதியுள்ளவன் என்று அவனுக்கே தெரியவில்லை. கூலிவேலை செய்வதற்கு உடம்பில் சக்தி போதாது. இவ்வாறு திகைத்துக் கொண்டிருக்கையில், காலவசத்தால் கமலாபுரம் என்ற ஊரில்,