பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

சோலை சுந்தரபெருமாள்


இப்பொழுது சர்மாவுக்கு வயது இருபது. வீரம்மாளுக்கு பதினான்கு. ஊரிலே சர்மாவுக்கு நல்ல மதிப்பு. பிள்ளைகளுக்கு அவனிடம் ரொம்பப் பிரியம். இந்தச் சமயத்தில் ஊரார் தபால் அதிகாரிகளுக்கு மனுச்செய்து கொண்டார்கள். கமலாபுரத்தில் ஒரு கிளை தபாலாபீஸ் ஸ்தாபிக்கப்படுதல் வேண்டும் என்பது மனுவின் கோரிக்கை. மனுவை விசாரிக்கத் தபால் இன்ஸ்பெக்டர் வந்தார். ஊரார் அவரை மரியாதை செய்து வரவேற்றார்கள். சர்மாவும் அங்கிருந்தான். தபாலாபீஸ் வைப்பது என முடிவு செய்யப்பட்டு, வேலைக்கு சர்மாவை நியமிப்பது உசிதம் என வேண்டிக் கொள்ளப்பட்டது.

“அவன் யார், எங்கே அவன்” என்றார் இன்ஸ்பெக்டர். சர்மா அவர் முன்னிலையில் வந்து நின்றான்.

“நீ பிராமணனா? உன்னைப் பார்த்தால் பையன் போலிருக்கிறதே? தபாலாபீஸ் பணம் புழங்குகிற இடமாயிற்றே? கையரிக்கக் கூடாதே! பிராமணனா” என்றார் இனஸ்பெக்டர்.

“நல்ல பிள்ளை! வேண்டுமானால், அவருக்காக நான் ஜாமீன் நிற்கிறேன்” என்றார் பள்ளி நிர்வாகிப் பெரியார்.

விஷயம் முடிந்து, தபாலாபீஸ் உத்தியோக மூலமாய்க் கூடுதலாக, இன்னொரு ஐந்து ரூபாய் சர்மாவுக்கு கிடைத்தது. இரண்டையும் சேர்த்துப் பார்க்கும்படியாக, அவனுக்குக் காலமும் வேலையும் அமைந்தன. அன்றைய தபாலிலேயே தனது தாய்க்கு இந்த சந்தோஷச் செய்தியையும் எழுதி அனுப்பினான். அன்றைய தினம் வழக்கம் போல் வீரம்மாள் வந்தாள்.

“வீரம்மா! சங்கதி கேட்கவில்லையே! நம்ம ஊருக்குத் தபாலாபீஸ் வரப்போகிறது. நான் அதற்கு அதிகாரி. அதற்காக எனக்கு ஐந்து ரூபாய் சம்பளம். இரண்டு சம்பளமும் சேர்ந்து எனக்குப் பத்து ரூபாய் கிடைக்கும். இனிமேல் நான் பணக்காரனில்லையா” என்றான் சர்மா.

“அப்பா! நல்ல வேளை! இனிமேல் உங்களுக்கு கடன் தொந்திரவு இருக்காது. ரொம்ப சந்தோஷம். சுவாமி!” என்றாள்.

“வீரம்மா! நீ புத்திசாலி. பார்த்தாயா, அந்தப் பாழான் கடனை மறந்து விட்டேனே! உண்மை; இனிமேல் கடன் இருக்காது. இனிமேல் உன் பாடங்களை நீயே படித்துக்கொள்ள வேண்டும். தபால் வேலையும் சேர்ந்தால் சமையல் செய்யக்கூட எனக்கு நேரமிராது. ஆகையால் உன் சந்தேகத்தை நீ கேட்டுக் கொள். நீ தனியாக எதையும் கற்றுக் கொள்ளக் கூடிய நிலமைக்கு வந்து விட்டாய்” என்றான் நாராயணன். அவள் ஒன்றும் சொல்லாமலிருந்தாள். “பேசாமலிருக்கிறாயே” என வினவினான்.

“ஒன்றுமில்லை; நான் சொல்வதைக்கேட்பதாயிருந்தால்,