பக்கம்:தஞ்சைச் சிறுகதைகள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தஞ்சையின் இன்றையப் புகழ்பெற்ற படைப்பாளர்களில் ஒருவரான சோலை சுந்தரபெருமாள் தஞ்சை மண்ணி இலக்கியச் செல்வர்கள்-முக்கியமாக சிறுகதை பிரம்மாக்கள் பற்றி பெருமை கொண்டு, அவர்களைப் பற்றிய தகுந்த அறிமுக உரையோடு அவர்களது விசேஷமான சிறுகதை ஒன்றையும் தொகுத்து வழங்க முற்பட்டது இயல்பாக அவருக்குள்ள மண்ணின் பற்றுதலையும் பெருமையையும் புலப்படுத்துகிறது.

சோலை சுந்தரபெருமாள் மண்ணின் மனம் பரப்பும்-தஞ்சை மண்ணின் மக்களது வாழ்க்கை முறைகளையும், இயல்புகளையும், பேச்சுவழக்குகளையும், பழக்கங்கள் சடங்குகள் சம்பிரதாயங்கள் முதலியவற்றையும் பதிவு செய்யும் தன்மையில் அருமையான பல நாவல்களையும், குறுநாவல்களையும், சிறுகதைகளையும் படைத்துப் பெயர் பெற்றிருக்கிறார். அவர் தனது முன்னோடிகள் மற்றும் சமகாலத்தவர்களான தஞ்சை சிறுகதைப் படைப்பாளர்களது எழுத்துக்களைப் படித்து ரசித்ததோடு அமையாது, அவ்வெழுத்தாளர்கள் பற்றியும் அவர்களது சிறுகதைகள் குறித்தும் வாசகர்கள் அறிந்து கொள்ளவேண்டும் என்ற அவாவுடன் “தஞ்சை சிறுகதைகள்” எனும் இந்த அருமையானத் தொகுப்பைத் தயாரித்திருக்கிறார்.

இத்தகைய ஒரு தொகுப்பைத் தயாரிப்பது சிரமமானக் காரியமாகும். படைப்பாளர்கள் பற்றிய விவரங்கள் சேகரிப்பது கஷ்டமான செயல். அதைவிடச் சிரமமானது அவர்களது படைப்புக்களைத் தேடிக் கண்டுபிடிப்பது. இச்சிரமமான பணிகளில் சோலை சுந்தரபெருமாள் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு பொறுமையோடும், விடாமுயற்சியோடும் அரிதில் முயன்று தகவல்களையும் நல்ல கதைகளையும் தேடிச் சேகரம் செய்துள்ளார். இது பாராட்டுதலுக்குரிய ஒரு சாதனைதான்.