பக்கம்:தமிழர் இனிய வாழ்வு.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

17

என்ற மூதில் முல்லை இலக்கணச் செய்யுள் குறிக்கும். இவ்விலக்கணத்திற்கு இலக்கியமாக எண்ணிறந்த பாடல்கள் புறநானூற்றில் உண்டு. கணவனும் தமையனும் களத்திலிறக்க, போர்க்கோலம் புனைவித்துப் போருக்கனுப்பிய தாயின் வீரம் (புறம்:279), நரை மூதாட்டி தன் முதுமைப் பருவத்து அருமையாய்ப் பெற்ற ஒரு தனி மகனும் போரிலிறக்க வருந்தாது ஈன்ற ஞான்றினும் பெரிதும் மகிழ்ந்த தாயின் வீரம் (புறம்.277) இப்பாடல்களிற் பொலிந்து தோன்றும்.

இவ்வாறு வீட்டிலும் நாட்டிலும் புகழுடன் பொலியும் மகளிர், தமக்கு மனைவியராய் வாய்ப்பதையே பெரும் பேறாகக் கருதினர் ஆடவர் என்னும் கருத்து, குறுந்தொகைப் பாட்டொன்றிற் சிறந்து விளங்கும். ஒரு தலைவன் தன்னுர்ப் பெருந்தெருவில் செல்லும்போதெல்லாம் பலரும் அவனைச் சுட்டிக் காட்டி, "நம்மூர் நல்லாள் இன்னாளில் கணவன் இதோ செல்கின்றான்!” எனக் கூறுவது, சற்று நாணத்தைத் தருவதென்றாலும் அதனையே பெரும் பேறாகக் கருதினனாம்!

"...................அரிவையைப்
பெறுக தில்ம்ம யானே பெற்றாங்கு
அறிக தில்லம் மஇவ்ஆரே மறுகில்
நல்லோள் கணவன் இவனெனப்

பல்லோர் கூறயா நானுகஞ்சிறிதே" -
குறு. 14

என்ற அளவுக்குத் தமிழக மகளிர் தம் கணவன்மாருக்குப் பெருமை தேடித் தந்தனர். வாழ்ந்தோங்குக தமிழக மகளிரின் தனிப் பெரும் பண்பாடு.