பக்கம்:தமிழர் இனிய வாழ்வு.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

பேணாது துறத்தலும் ஒரோ வழிநடத்தலும் கூடும். அந்நிலையில் ஊர் மக்களால் எட்டியும் சுட்டியும் இழிக்கப்படும். சிலரும் பலரும் கடைக்கண்ணோக்கி மூக்கின் உச்சி சுட்டுவிரல் சேர்த்தி மறுகில் அம்பல் தூற்றவுமாகும். எனவே பலருமறிய, கொடுத்தற்குரியோர் கொடுக்கக் கொள்ளற் குரியோர் கொள்ளும் நிலை ஏற்பட்டதென்க. அன்றியும் “பிரிவின்றியைந்த துவரா நட்பொடு, இருதலைப்புள்ளின் ஒருயிராய்' ஒழுகிய தலை மக்கள் தங்கள் நலனையே யன்றிச் சமூக நலனையும் நோக்கி வாழவேண்டிய இல்லறத்தை ஏற்குங்கால் அச் சமுதாயத்து மக்கள் அனைவரும் அறியும் வகையில், அவ்வாழ்வைத் தொடங்குதலும் ஏற்புடைத்தாகும். இருமுதுகுரவரும், சுற்றமும் நட்பும், உற்றோரும் மற்றோரும் வாயார உண்டு. மனமார வாழ்த்தித் தொடங்கும் நல்வாழ்வே சிறக்கும் என்பதாலும் களவு கடந்து கற்பொழுக வாழ்வும், அதன் தொடக்கமாய திருமணமும் வேண்டப்படுவதாயிற்று. களவு கற்பெனும் கைகோள் இரண்டனுள் களவின் வழி கற்பெனும் கைகோள் இரண்டனுள் களவின் வழி வந்த கற்பொழுக்கம் சிறப்புடையது. இதனை, உயிரினும் சிறந்தன்று நாணே, நாணினும் செயிர் தீர்காட்சிக் கற்புச் சிறந்தன்று என்ற தொல்காப்பிய நூற்பா நுவல்கின்றது.

கற்பாவது கற்பித்தபடி நடத்தலென்றாகவே, கற்றற்குரியன யாவை என நோக்குதல் வேண்டும். இதனைத் திருவள்ளுவர் 'வாழ்க்கைத் துணை நல”த்தில் னிதியம்புகின்றார். இல்லறத்தின் கடமையாக, இளங்கோவடிகளும், "அறவோர்க் களித்தலும், அந்தண ரோம்பலும், துறவோர்க் கெதிர்தலும், தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடலும்” என எடுத்துக் காட்டுகின்றார். அத்தகு வாழ்வை, "விருந்து புறந்தரூஉம் பெருந்தண்வாழ்'