பக்கம்:தமிழர் இனிய வாழ்வு.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

பாவப் படுகுழியில் வீழத்தக்க நிலையில் உள்ள இவர்கள் பலருமறியத் திருமணம் செய்து கொள்ளும் முறையைக் கருதிச் செய்துகொள்ள வேண்டும். அப்படித் தமிழர் அனைவரும், ஒரே முகமாக வேறுபாடு மாறுபாடு இன்றி, தோட்டி முதல் தொண்டைமான் வரையில், தமிழ் மரபு வழுவாமல் மேற்கொண்டு ஒழுகத்தக்க ஒரே ஒரு திருமண முறை வகுக்கப்பட்டு வழங்கி வரும் நாளே தமிழகத்தின் நன்னாளும் பொன்னாளும் ஆகும். களவு வாழ்வியலில் நாளடைவில் ஊழல்கள் புகுந்த காரணத்தினாலேயே கற்புத் திருமண முறை சான்றோரால் வகுக்கப்பட்டதைப் 'பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர், ஐயர் யாத்தனர் கரணம் என்ப' என்னும் தொல்காப்பிய நூற்பாவால் நன்குணரலாம். இதனை அடுத்து வரும் நூற்பாக்களிற் பயிலும், 'மேலோர்' 'கீழோர்' போன்ற தொடர்கட்குச் சிலர் தமிழ்ப் பண்பாட்டுக்கு மாறுபட்ட பொருந்தாவுரை கூறி வந்துள்ளனர். அவருரைத்த மாறுபட்ட வேறுபட்ட உரையெல்லாம் நாவலர் நாட்டார், டாக்டர் பாரதியார், அறிஞர் மாணிக்க நாயக்கர், தமிழ் மலையாம் மறைமலையடிகளார் முதலிய பைந்தமிழ்ப் பாவலர்கள் பகர்ந்த உரையாகிய கதிரவன்முன் பனியெனச் சிதறுண்டன.

தொல்காப்பியர் காலத்திற்கு முன்னரே, சங்கத்துச் சான்றோர்களின் செய்யுட்களுக்கு முன்னரே, திருமண முறைகள் இருந்திருக்க வேண்டும். அதுபற்றியன்றே தொல்காப்பிய இலக்கண நூலிலும் பொருளிலக்கண வரையறை செய்யும்போது, மணமுறை பற்றிய குறிப்புக்களும் காணப்படுகின்றன. கடைச் சங்க காலத்தில் (கி.பி. இரண்டாம் நூற்றாண்டு-அதன் இறுதிக் காலம்) திருமண முறை இருந்ததெனக் குறிப்பா யுணர்ந்த போதிலும், அது எவ்வாறு நிகழ்ந்தது எனத் தெளிவாக