பக்கம்:தமிழர் இனிய வாழ்வு.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

கூறியதாகவும் கொள்ளலாம். ஈகை என்பதனைப் பொன்னாக்கிப் பொன்னாலாகிய தாலி என்றும் புகலலாம். "ஈகை வான் கொடியன்னாள் என்பதில் ஈகை பொன்னுப் பொருளில் பொருந்தியது காண்க. எப்பொழுது தாலி கட்டப்படும் என்ற விவரங்களுக்குச் சான்றுகள் காணப்படுவதில்லை. இது இன்னும் ஆராய்தற்குரியது.

இனி, திருமணம் மணமகள் இல்லத்திலேயே நிகழும். ஒரோவழி மணமகன் மனையிலும் நிகழுவதுண்டு. உடன் போக்கிற்குப்பின்னிகழும் திருமணம் தலைவன் இல்லில் நிகழும். அவ்வாறு நிகழினும் பின்னர்த் தலைவியின் பெற்றோர் மீண்டும் தமதில்லில் தமர் அறிய மணம் புணர்ப்பர் என்றும் அறியலாம்.

“நும்மனைச் சிலம்பு கழிஇ அயரினும்
எம்மனை வதுவை நன்மணம் கழிகெளச்
சொல்லின், எவனே மற்றே வென்வேல்
மையற விளங்கிய கழலடிப்

பொய்வல் காளையை ஈன்ற தாய்க்கே”
-குறுந்தொகை 399

என்னும் செய்யுளில் இது குறிக்கப்படுகிறது என்பர் அறிஞர்.

எனவே, கடைச் சங்ககாலத்தில், புரோகிதர் புகுதலின்றியே, மணமக்கள் தம்பெற்றோரும் மற்றோரும், உற்றோரும் உறவினரும் புடைசூழ மணவினையை மகிழ்ந்தாற்றி வாழ்ந்தனர் என அறிகிறோம். ஆனால், காலப் போக்கில் தமிழகத்தில் பிற பண்பாடுகள் வந்து மலிந்து கலப்புற, மண முறையிலும் இடைப்பிறவரல்கள் வந்துற்றன். வரலாற்று முறையில் காய்தல் உவத்தல் களைந்து ஆராய்வார், காலத்திற்குக் காலம், படிப்படியாகத் திருமண முறை மாறுபாடுற்று வந்துள்ளதை நன்கு