பக்கம்:தமிழர் இனிய வாழ்வு.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

வெண்ணலாம். மதுரைக் கணக்காயனார் முதலிய பெயர்களாலும், இறையனாரகப் பொருளுரை ஆசிரியர் மாணவர்க் குரைத்து வழிவழியாக வந்து பின்னரெழுதப்பெற்ற தென்பது கொண்டும், 'கந்தனைய னையவர்கலை தெரிகழகங்'கள்பற்றி நம் பெரும் புலவர்கள் குறிப்பது கொண்டும் தமிழர் கல்வி கற்று ஆராய்ச்சியுடையராயிருந்தன ரெனலாம். கல்வியின் பெருமையையும் கற்கவேண்டுவதன் இன்றியமையாமையையும் குறளேயன்றி வேறு சில சங்கப்பாட்டுகளுங் கூறுகின்றன.

எனினும், பழநூல்கள் தவிரப் பிற சான்றுகளெல்லாம் நம்மை வேறொரு வழியில் எண்ணத் தூண்டுகின்றன. கி.பி. ஆறாம் நூற்றாண்டு வரை தமிழ்க் கல்வெட்டுக்கள் காணக் கிடைத்தில. தமிழ் நாட்டிற் காணப்படும் பழைய குகைக் கல்வெட்டுக்கள் பிராமி யெழுத்திலெழுதப்பட்டுள்ளன. இவையும் பெரும் பாலும் ஜைன பெளத்தச் சார்பான குறிப்புக்களையே உடையன.

ஜைனம் பெளத்தம் வேதநெறியாகிய இவை தமிழர் சமூகத்திற் பரவியபின், தமிழ்நாட்டில் சமஸ்கிருதக் கல்வி பற்றியே பல குறிப்புக்களுள்ளன. தமிழிலக்கண இலக்கியப் புலமையூட்டும் பள்ளிகளைப் பற்றி யெதுவுந் தெரிந்திலது.

இத்தகைய மோகந் தமிழர் சமூகத்திலேற்படக் காரணமென்ன வென்பதையறிஞர்கள் ஆராயவேண்டும். காரணமெதுவாயினும் தமிழர் சமூகத்தின் தனிநிலையை பெரு நிலையை இக்கல்வி யேற்பாட்டுக் குறைபாடு குறைத்த தென்பதிலையமில்லை.