பக்கம்:தமிழர் இனிய வாழ்வு.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
1. தமிழக மகளிர்

அ. காமாட்சி குமாரசாமி, எம்.ஏ.,
தமிழ்ப் பேராசிரியர், சேலம் நகரசபைக் கல்லூரி


"மனைக்கு விளக்காகிய வாணுதல் கணவன்
முனைக்கு வரம்பாகிய வெவ்வேல் நெடுந்தகை”

என்பதற்கிணங்க, வீட்டின் விளக்கைப்போல் விளங்குபவர் மகளிர். போர் முனையேயன்றி நாட்டு வாழ்க்கைக்கே உரியவராய் விளங்குவோர் ஆடவர். வீடுதோறும் செம்மை விளங்கின், வீடு தானாகவே செம்மையுறும் என்பது உலகங்கண்ட உண்மை. எனவே விட்டின் விளக்கைப் போல் விளங்கிய மகளிரின் அருமை பெருமைகளை ஆராய்வோம்.


தலைப்பிற் காணும் தமிழகம் காலங் கடந்த சொல்லாய்த் திகழினும் பிற்கால தமிழகப் பண்பாட்டிற்கும் தாயகமாய் விளங்கியது சங்க காலப் பண்பாடு. எனவே, அக்காலத்து மகளிரின் தன்மைகளை ஆராய்வதே தகுதியுடையதாகும். பண்டைத் தமிழ் மகளிரை நினைத்த மாத்திரத்தே பெரும்படை போன்ற மகளிர் தொகுதியே மனக்கண்முன் வந்து நிற்கின்றது. அக்கூடத்திற்தோன்றி முன்னிற்பொருள் ஒளவை போன்ற பெண்பாற் புலவர் பலர்; கோப்பெருந்தேவி, பூதப்பாண்டியன் மனைவி போன்ற அரசியர் சிலர்; கண்ணகி, மணிமேகலை போன்ற காவியத் தலைவியரும் உளர். இவர்தம் பண்புகளை யெல்லாம் எடுத்தியம்புதல் இச்சிறு கட்டுரையில் இயலாது.