பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

இலக்கியத் துறையை வந்தடைந்தது. படைப்போர், நொண்டி நாடகம் , திருமண வாழ்த்து, தமிழ் முதலிய பிரபந்த வகைகள் தமிழுக்கென்றே தமிழ் முஸ்லிம்களால் உருவாக்கப்பட்டவைகளாகும்.

மசலா இலக்கியங்கள்

மசலா என்பது அரபிச் சொல்லான 'மஸ் அலா' என்பதிலிருந்து மறுவி வழங்கும் சொல்லாகும். 'மஸ்அலா' என்ற அரபுச் செல் 'தேடுதல்’, ‘வினவுதல்', 'வினா' என்ற பொருள்களில் வழங்கப்படுகிறது. இச்சொல் ஸீஆல்’ (கேள்வி) எனும் அரபுச் சொல்லினடியாய் பிறந்ததாகும். இதற்குப் 'பிரச்சினை' எனும் பொருளும் உண்டு. இஸ்லாமிய மார்க்கம பற்றிய நிறையறிவு பெற்ற வரிடம் ஒருவர் சென்று இஸ்லாமிய நெறி பற்றி மேலும் தெரிந்துகொள்ள தெளிவுபெற வினாவெழுப்பி, உரிய விடைகளைப் பெற்று ஐயந்தீர்த்துக் கொள்வதை 'மஸ்அலா’ கேட்டறிதல் எனக் கூறப்படுகிறது. எனவே கேள்வி யை உள்ளடக்கியதான மசலா இலக்கியங்கள் பெரும்பாலும் கேளவி-பதில் வடிவிலேயே தமிழில் இலக்கியங்களாக வடிக்கப்பட்டுள்ளன. இவ்வகை இலக்கியங்கள் தமிழில் மூன்று உள்ளன முஸ்லிம் தமிழ்ப் புலவர்களால் உருவாக்கப்பட்ட இம்மூன்று இலக்கியங்களாவன: 1. ஆயிர மசலா 2. நூறு மசலா 3. வெள்ளாட்டி மசாலா ஆகியவையாகும்.

இம் மூன்று இலக்கியங்களில் அளவில் பெரியது ஆயிர மசாலா ஆகும் அதோடு, இவ்விலக்கியம் காலத்தாலும் மிகவும் முற்பட்டதாகும். இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாற்று அடிப்படையில் கூறுவதென்றால் தமிழில்இயற்றப்பட்ட இஸ்லாமிய இலக்கியங்களில் முதல் நூலாகக் கருதப்படுவது 'ஆயிரம் மசலா' நூலேயாகும். இந்நூலின் முழுப் பெயர் "ஆயிர மசலாவென்று வழங்கும் அதிஜய புராணம்" என்பதாகும்.