பக்கம்:தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



என்னுரை

தமிழ் இலக்கிய வளர்ச்சியில் தமிழக முஸ்லிம் தமிழ்ப் புலவர்களின் பங்களிப்பு மிகப் பெரியதாக இருந்தும், கால வோட்டத்தில் அவர்தம் தமிழ்ப் பணி மக்களின் கவனத்திலிருந்து ஒதுங்க நேரிட்டதை காலப் போக்கின் விளைவு என்றே கூறவேண்டும்.

இஸ்லாமியத் தமிழ்ப் புலவர்களின் அரிய தமிழ்ப் பணியை, இலக்கிய வளர்ச்சிக்கு அவர்கள் வழங்கிய அரும் பெரும் படைப்புகளை, மீண்டும் மக்களின் கவனத்துக்குக் கொண்டுவந்து, அவற்றின் மீது ஈடுபாடு ஏற்படச்செய்ய வேண்டும் என்ற உணர்வு என்னுள் இளமை தொட்டே முளைவிட்டு வளர்ந்து வந்தபோதிலும் அவ்வுணர்வுக்கு ஒரு அழுத்தமும் வேகமும் விறுவிறுப்பும் ஏற்பட்டது 1964-ம் ஆண்டிலேதான்.

அவ்வாண்டின் தொடக்கத்தில் ஒரு நாள் மாலை பன்னுாலாசிரியர் எம்.ஆர்.எம் அப்துற்- றஹீம் அவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தபோது. சிலப்பதிகார இலக்கியத்தில் நான் கண்டுணர்ந்த சில புதிய ஆய்வுகளை ஆர்வத்துடன் கூறினேன் அவற்றைப் பாராட்டிய கையோடு தனது ஏக்க உணர்வையும் என்னிடம் வெளியிட்டார். "சிலப்பதிகாரத்தை ஆராய ஆயிரக்கணக்கானோர் இருக்கிறார்கள். ஆனால் நம் முன்னோர்கள் எழுதிக் குவித்துச் சென்றுள்ள இஸ்லாமிய இலக்கியங்களை எடுத்துச் சொல்லவோ ஆராயவோ அதிகம் பேர் இல்லை. உங்களைப் போன்ற ஆர்வலர்களாவது இப்பணியில் ஈடுபட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும். காலத்தின் இன்றியமையாத் தேவையான ஒரு நற்செயலைச் செய்து முடித்த பெருமையும் மகிழ்வும் உங்களுக்கு ஏற்படுமே!"