பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4

தமிழ் நாடும் மொழியும்


பல்லவரைப் பற்றி ஒரு சொல்கூட இல்லை. அதுமட்டுமல்ல; கி. பி. 700-800-ல் சைவம் செழித்திருந்தது. சங்கச் சார்புள்ள இலக்கியங்களிலே சமண பௌத்த சமயங்களின் செல்வாக்கே தெரிகிறது. மோரியர் படையெடுப்பு, புத்த - சமண மதக் கருத்துக்கள் முதலியன தென்படுகின்றன. அதுமட்டுமா? சிலப்பதிகாரத்திலே செங்குட்டுவன் நடத்திய பத்தினி விழாவில் இலங்கைக் கயவாகு மன்னன் கலந்துள்ளான் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தக் கயவாகுவின் காலம் கி. பி. 173-195. எனவே சங்க காலத்தின் கீழ் எல்லை கி. பி. 200 ஆகும்.

வரலாற்றுப் பகுதிகள்

ஒரு நாட்டின் வரலாறே அந் நாட்டு மக்களின் நாகரிகத்தைக் காட்டுகிறது என்று கூறினால் அது மிகையாகாது. எந்த நாட்டு மக்களும் தனித்து வாழ்தல் இயலாது. பிற நாட்டினரின் படையெடுப்பு நிகழ்ந்து அயலார் கையகப்பட்டு ஒரு நாடு தவிக்குமேயாயின் அது அந்நாட்டின் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகும். வென்றவர் தம் மொழி, கலை, பண்பாடு, நாகரிகம் என்பன தோற்றவரிடையே கலத்தல் இயல்பு. இதன் காரணமாய் ஒவ்வொரு துறையிலும் பெரும் மாற்றங்கள் நிகழலாம். இதனை மனதிலே கொண்டு தமிழ்நாட்டு வரலாற்றை ஆராயப் புகுந்தால், வரலாற்றிற்கு முற்பட்ட காலம், சங்க காலம், பல்லவர் காலம், சோழர் காலம், பாண்டியர் காலம், பிற நாட்டார் ஆட்சிக் காலம், மக்களாட்சிக் காலம் எனத் தமிழ்நாட்டு வரலாற்றை ஏழு பிரிவின் கீழ் அடக்கலாம்.

வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தைப் பழைய கற்காலம், புதிய கற்காலம் என இரு வகையாகப் பிரிக்கலாம். பதப்படுத்தப்பெறாத கரடுமுரடான கற்களைப் பயன்படுத்தித்