பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
2. தமிழகம்

முத்தமிழ் வளர்த்த மூவேந்தரின் முக்குடைக் கீழ் விளங்கிய நந்தம் செந்தமிழ் நாட்டின் எல்லை, அங்கு விண்ணையும் முட்டிக் கொண்டு நிற்கும் மாமலைகள், அவற்றிலிருந்து நெளிந்து ஓடும் தெண்ணீராறுகள், அவை பாயும் நிலப்பரப்பு, நிலப்பிரிவுகள் ஆகியவற்றை ஈண்டு பார்ப்போம்.

எல்லை

தொல்காப்பிய முதல் பாரதியார் நூல்கள் வரை இடைப்பட்ட அத்தனை இலக்கியங்களிலும் தமிழகத்தின் எல்லைகள் நன்கு பேசப்பட்டுள்ளன.

தண்டமிழ் வழங்கும் தமிழகத்தின் எல்லை இன்று போலன்றிப் பண்டு பரந்து கிடந்தது. ஜார்ஜ் எலியட் என்பவரின் ஆராய்ச்சியின்படி மிக மிக நெடுங்காலத்திற்கு முன்பு வடக்கே விந்திய மலையும் தெற்கே குமரியும் கிழக்கும் மேற்கும் கடல்களும் பண்டைத் தமிழகத்தின் எல்லைகளாக இருந்தன. குமரிக் கண்டம் இன்று இந்துமகாக் கடலாக விளங்குகிறது. தொல்காப்பியர் காலத்தில் வடக்கே வேங் கடமும் தெற்கே குமரியும் கிழக்கும் மேற்கும் கடல்களும் எல்லைகளாக இருந்தன. இதனைத் தொல்காப்பியத்திற்குப் பாயிரம் தந்த பனம்பாரனார், 'வட வேங்கடம் தென்குமரி நல்லுலகம்' எனவும், சிகண்டியார், 'வேங்கடம் குமரி தீம் புனல் பௌவம் என்று இன்னான்கு எல்லை தமிழது வழக்கே' எனவும், காக்கை பாடினியார்,