பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ப் பெரும் புலவர்
ஆபிரகாம் அருளப்பன் பி.ஏ.,
தமிழ்ப் பேராசிரியர்

தூய சவேரியர் கல்லூரி,
பாளையங்கோட்டை
27-5-59

வாழ்த்துரை


நம் வண்டமிழ் நாடு, செந்தமிழ் மொழி பற்றிய வரலாறு இன்றளவும் தகுந்த முறையில் வெளிப்படவில்லை இக் குறையைக் குறைப்பதற்குப் பல அறிஞர் முயன்று ஆராய்ந்து தக்க கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார்கள். அத்தகைய முயற்சிகளுள் சிறந்த வொன்றக நண்பர் திரு அ. திருமலை முத்துசுவாமி அவர்கள் எழுதியுள்ள ’தமிழ் நாடும் மொழியும்’ என்ற இந்நூல் மதிக்கத்தக்கது.

காய்தல் உவத்தல் அகற்றி ஆய்தல் அறிவுடையார் கடமை என்ற உண்மையை உள்ளத்தில் அடிப்படையாகக் கொண்டு மேனாட்டாரும் நம் நாட்டாருமாகிய அறிஞர் கருத்துக்களையும் அறிந்து, தமிழ் நாட்டு வரலாறு, தமிழ்மொழி வரலாறு இவை பற்றிய தம்முடைய கருத்துக்களை இவ்வாசிரியர் அமைக்கும் முறை பெரிதும் பாராட்டத்தக்கது. சங்ககாலம், பல்லவர்காலம், பிற்காலம், அரசியல், வாழ்வியல், சமயவியல், இலக்கியம் இவை பற்றிய கால வரையறையும் பிறவுங் குறித்து எழுந்துள்ள பல்வேறு வகையான முரண்பட்ட கருத்துக்களிடையே நடுவு நிலையோடு இயன்ற மட்டும் உறுதியுடன் நின்று படிப்போர் தெளிவுபட உணரும் வழியில் இவ்வாசிரியர் கூறியிருப்பது கற்று மகிழ்தற்குரியது.

தமிழ் நாட்டுக்கும் மொழிக்கும் தொண்டாற்றும் நண்பர் அ. திருமலைமுத்துசுவாமி அவர்களுடைய நல்ல முயற்சியைச் செய்நன்றியறிவோடு பாராட்டி மனமார வாழ்த்தி மேலும் நற்பணியாற்ற ஊக்குவிப்போமாக.

ஆபிரகாம் அருளப்பன்