பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சங்க காலம்

33


அளிக்கப்பட்டது என்பதும், மகிழ்ச்சியின் காரணமாய் வீரர்கள் மதுவுண்டு ஆடிப்பாடி மகிழ்ந்தனர் என்பதும், இன்ன பிறவும் தொல்காப்பியத்தால் அறிய முடிகின்றது.

சுருங்கக்கூறின் தொல்காப்பியர் காலத்திலேயே தண்டமிழ் நாடு சிறக்க வாழ்ந்து வளம்பெற்ற நாடாய் விளங்கியது.

கடைச்சங்க காலம்

தமிழகத்தின் பொற்காலம் கடைச்சங்க காலமாகும். இக்காலமே தமிழ் நாகரிகச் சிறப்பை உலகுக்குக் காட்டிய காலமாகும். இனி இக்காலத் தமிழகத்தின் கலை, கல்வி, பண்பாடு, வாணிக வளம், மொழியின் செழுமை ஆகியவற்றைப் பார்ப்போம். மேற்கூறியவற்றை நாம் அறிய உதவுவன சங்கத் தொகை நூல்களும், கி. பி. முதலிரு நூற்றாண்டுகளில் வாழ்ந்த பிளினி, தாலமி என்போரின் குறிப்புகளும், பெரிப்ளூசின் ஆசிரியர் குறிப்புகளுமாம்.

தமிழ் வேந்தர்கள்

சங்க காலத்தில் தமிழகம் முடியுடை மூவேந்தர், குறுநில மன்னர் முதலியோரால் ஆளப்பட்டது. குறுநில மன்னர் ஏறத்தாழ 300 பேர் தமிழகத்தை ஆண்டனர். வளமிக்க வயல் சூழ்ந்த நகரப் பகுதிகளும் கடற்கரையும் முடியுடை மன்னரால் ஆளப்பட்டன. குன்று நிறைந்த பகுதிகளும், காடும் மேடும் நிறைந்த சிற்றூர்களும், வேளிர்கள், வள்ளல்கள் ஆகிய குறுநில மன்னரால் ஆளப்பட்டன. குறுநில மன்னருள் முடியுடை மூவேந்தர்க்கு அடங்கியோரும் உண்டு; அடங்காது தனித்து விளங்கியோரும் உண்டு.

தமிழகத்தை மூவேந்தர் பாகுபாடு செய்துகொண்டு ஆண்டார்கள். அவர்கள் ஆண்ட மூன்று பகுதிகளும்