பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

தமிழ் நாடும் மொழியும்


முறையே சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு என வழங்கப்பட்டன. எனவே அவர்கள் சேர சோழ பாண்டியரெனப்பட்டனர்.

வடக்கே வானியாறு, தெற்கே கோட்டாறு, கிழக்கே மேற்குத்தொடர்ச்சி மலை, மேற்கே கடல் ஆகியவற்றிற்கு இடைப்பட்ட நிலம் சேர நாடு ஆகும். பாண்டிய நாடு என்பது தென்குமரிக்கும் வெள்ளாற்றுக்கும் இடையில் உள்ளதாகும். சோழ நாடு என்பது வெள்ளாற்றுக்கும் தென் பெண்ணைக்கும் இடையே பரந்து விளங்குவது. தென்பெண்ணைக்கும் வடபெண்ணைக்கும் இடைப்பட்டது தொண்டை நாடாகும்.

பாண்டியருக்கு வேப்பந்தாரும், சேரருக்குப் பனந்தாரும், சோழருக்கு ஆத்திமாலையும் அடையாள மாலைகளாம். பாண்டியரின் சின்னம் மீன்; சோழரின் சின்னம் புலி; சேரரின் சின்னம் வில். பாண்டியரின் தலை நகர் மதுரை நகர்; கடற்கரை நகர் கொற்கை. சோழரின் தலைநகர் புகார், உறையூர்; துறைமுகம் புகார். சேரருக்குத் தலைநகர் வஞ்சி; துறைமுகம் முசிறி. இன்று மலையாளம் வழங்கும் பகுதி முழுதும் சேர நாடாய் விளங்கியது. அந்நாடு அக்காலத்தில் தமிழ் வழங்கும் நாடாகவே இருந்தது. நெடுநாளைக்குப் பின்னரே அது மலையாள நாடாயிற்று.

இன்று கிடைக்கும் இலக்கியச் சான்றுகளின் மூலம் மிகவும் பழமையான, சிறப்பான சோழ மன்னன் கரிகாலன் என்பதை அறிகிறோம். இக் கரிகாலனே சோழ மன்னர்களிற் சிறந்தவன். "வலிமை மிக்க புலி கூட்டில் அடைபட்டு வளர்ந்தாற்போல பகைவரது சிறையிலிருந்து வளர்ந்த கரிகாலன் பிள்ளைப் பருவமுதலே வலிமை மிக்கவனாகவும், சீற்றத்திலே முருகப்பெருமானை ஒப்பவனாகவும் விளங்கினான்.