பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சங்க காலம்

35


பின்னர் அவன் பகைவரை வென்று முறைப்படி அரசுரிமையைப் பெற்று, பகைவர் நாடுகளைக் கைப்பற்றிச் சோழ வல்லரசை நிறுவினான். பகைவர் ஊர்களில் கூகைகள் இருந்து குழறின; மதில்கள் அழிந்தன. சேர பாண்டியரை வெண்ணியில் வெற்றிகண்டவன்; ஆத்தி மாலையை அணிபவன்; நினைத்தவற்றை நினைத்தவாறே முடிக்கும் ஆற்றல் பெற்றவன்; அருவா நாட்டார், குட்ட நாட்டார், வடநாட்டார், இருங்கோ வேளிர் முதலியவர்களை வென்றவன்; காடு கெடுத்து நாடாக்கியவன்; குளம் தொட்டு வளம் பெருக்கியவன்; கோயில் கட்டியவன்; தமிழ்க்குடிகளைக் காத்தவன்” என்றெல்லாம் பத்துப்பாட்டு இவனது அருமை பெருமைகளைக் கூறுகின்றது.

கரிகாலன் சோழநாட்டரச பதவியை அடைவதற்கு மிகவும் பாடுபட்டான். அரசனானதும் முதலில் உள்நாட்டுக் குழப்பத்தைத் திறம்பட அடக்கினான். தன்னை எதிர்த்த சேரனையும் பாண்டியனையும் வெண்ணி என்னும் இடத்தில் வெற்றிகண்டான். இதன் பிறகு இவன் வடநாட்டின் மீது படையெடுத்தான் எதிர்த்த வடநாட்டு மன்னரை எல்லாம் முறியடித்தான். பின் இமயம் சென்று தன் புலிக்கொடியைப் பொறித்து மீண்டான். பேராசிரியர் பண்டித மு. ராகவய்யங்கார் கரிகாலன் இமயத்தில் புலி பொறித்த இடம் சிக்கிம், பூட்டான் என்ற பகுதிகளுக்கு இடையிலுள்ள மலைகள் என்று அறுதியிட்டுக் கூறியுள்ளார். 'இம்பீரியல் கெச்ட்டீர் ஆப் இந்தியா’ ( Imperial Gazetteer of India ) என்ற நூலும் மேற்குறித்த இடத்தில் ‘சோழன் மலை', 'சோழன் கணவாய்' என்ற பெயர்கள் இன்றும் வழங்குகின்றன என்று கூறுகின்றது.

வடநாடு சென்று வாகையுடன் திரும்பிய கரிகாலன் அடுத்து இலங்கை மீது படையெடுத்து அதனை வென்றான்.