பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

தமிழ் நாடும் மொழியும்


வன் சிறந்த வீரன்; செங்கோலன் தமிழரசரை வடவர் இகழ்ந்தனர் எனக்கேட்டு உடனே வடநாட்டின் மீது படையெடுத்துச்சென்றான். செல்லும் வழியிலே நூற்றுவர் கன்னர் என்ற வடநாட்டு மன்னர்களின் உதவி கிடைத்தது. பின்னர் வடக்கே சென்று கனகவிசயர் என்னும் ஆரிய மன்னரை முறியடித்துச் சிறைப்பிடித்தான். பனிவரையில் விற்கொடி பொறித்துவிட்டுப் பத்தினித்தேவிக்குப் படிமஞ்சமைக்க எடுத்த கல்லைக் கனகவிசயர் தலைமீதேற்றித் தமிழகம் மீண்டான். முன்னர் கொங்கர் செங்களத்தே நடந்த போரில் இவன் தன்னை எதிர்த்த சோழ பாண்டியரை வெற்றிபெற்றான். அடுத்துக் கடலை அரணாகக்கொண்டு இடர்விளைத்த பகைவரைக் கடலிற் படைகளைச் செலுத்தி, செங்குட்டுவன் வென்றனன். மேலும் தன்னை எதிர்த்த பாண்டிய நாட்டுத் தளபதி பழையனையும், சோழர் ஒன்பதின்மரையும் இவன் தனித்தனியே வெற்றிகொண்டான் என்றும் தெரியவருகின்றது. சுருங்கக்கூறின் சேரன் செங்குட்டுவன் தலைசிறந்த தமிழ்நாட்டு வேந்தர்களில் ஒருவன். சிலப்பதிகார வஞ்சிக் காண்டம் முழுவதும் இவன் வெற்றி பற்றியதேயாகும்.

பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் காலத்தில் பாண்டியர் செல்வாக்கு அடைந்தனர். தலையானங்கானத்துச் செருவென்ற பாண்டியனாகிய இந்நெடுஞ்செழியனால் கோச்சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறை தோற்கடிக்கப்பட்டான். இந்நெடுஞ்செழியன் மீது பாடியதே நெடுநல்வாடை. இதனைப் பாடியவர் நக்கீரர். மதுரைக் காஞ்சியும் இவனைப் பற்றியதே. இவன் இளமைப் பருவத்தில், சேரலிரும்பொறையோடு, சோழன், திதியன், எழினி, எருமையூரன், இருங்கோ, வேண்மான், பொருநன் என்ற எழுவரையும் ஒருசேர வென்றான். இவன் புலவர்களிடத்து