பக்கம்:தமிழ் அங்காடி.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தர சண்முகனார் 9


அரசியல்: மக்கள் கூடி வாழும் பண்புடையவர்கள் அதாவது, மனிதன் ஒரு சமூகப் பிராணி (Man is a social Animal) என்பது இவர் கொள்கை. அதனால், அரசு, அனைவரின் நலத்திலும் அக்கறை எடுத்துக் கொள்ளல் வேண்டும்; மக்களுள் பணக்காரரும் ஏழைகளும் இல்லாத நடுநிலை உருவாக வேண்டும்; அதற்கேற்ப ஆட்சி முறை அமையவேண்டும்.

இலக்கியம் பற்றி: துன்பியல் இலக்கியங்கள் மக்களின் உள்ளத்தில் அச்ச உணர்வையும் இரக்க உணர்வையும் ஏற்படுத்தி, ஏனைய உணர்ச்சிகளையும் உள்ளத்தையும் தூய்மை செய்யும் என்பது அரிஸ்ட்டாட்டிலின் கொள்கை.

இது சரியான கொள்கையேயாகும். 'மயான வைராக்கியம்' என்று சொல்கிறார்களே - அதுதான் இது. பிணத்தின் கூட மயானத்திற்குச் செல்பவர், இது போல் தானே நமக்கும் நடக்கும் நாம் ஒழுங்காய் நடக்க வேண்டும் என அந்த நேரத்திலாவது எண்ணுவார். சாவுப்பறை, சாகாதிருப்பவர்கட்குச் சுடுகாடு என ஒன்று. உள்ளது - ஒழுங்காய் ஒழுகுங்கள் என்று நினைவுபடுத்தி நெஞ்சை நடுங்கச் செய்கிறது என மணிமேகலை என்னும் நூலில் கூறப்பட்டுள்ளது.

"எஞ்சியோர் மருங்கின் ஈமம் சாற்றி
நெஞ்சு நடுக்குறுஉம் நெய்தல் ஓசை”

என்பது பாடல் பகுதி ஈமம் = சுடுகாடு. நெய்தல் = சாவுப்பறை.

மேலை நாட்டு ஆராய்ச்சி முறைகளும் அறிவியலின் அடிப்படையும் கலைச் சொற்கள் பலவும் அமைத்த பெருமை அரிஸ்ட்டாட்டிலுக்கு உரியதாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/11&oldid=1203000" இலிருந்து மீள்விக்கப்பட்டது