பக்கம்:தமிழ் அங்காடி.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தர சண்முகனார்  35


"நீல மாமணி கிருதர் வேந்தனை
மூல நாசம்பெற முடிக்கும் மொய்ம்பினாள்
மேலைநாள் உயிரொடும் பிறந்து தான் விளை
காலம் ஓர்ந்து உடனுறை கூடிய நோயனாள்”(8)

நிருதர் வேந்தன் = இராவணன். 'நீல மாமணி நிறத்து அரக்கன்' என்னும் ஞான சம்பந்தரின் தேவாரத் தொடர் (3:91:8), 'நீல மாமணி நிருதர் வேந்தன்’ எனக் கம்பரின் பாடலில் அறியக் கிடக்கிறது.

சூர்ப்பனகை இராவணனிடம் போய்க் கோள்மூட்டிச் சீதையை விரும்பும் எண்ணத்தைத் தூண்டியதாலேயே இராவணன் தன் குடும்பத்தோடு அழிந்தான். அதனால் தான், மூல நாசம் பெற முடிக்கும் மொய்ம்பினாள் எனப் பட்டாள். மூல நாசம் = வேரோடு அழிதல். மொய்ம்பு =வல்லமை

வீடணனும் அவனைச் சேர்ந்தவர்களும் அழியவில்லை எனினும், இராவணனின் வழி மரபு அழிந்து விட்டது.

"உடன் பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேண்டா
உடன்பிறந்தே கொல்லும் வியாதி”(20)

என்னும் ஒளவையின் மூதுரைப் பாடலின்படி, சூர்ப்பணகை உடன் பிறந்தே அண்ணன் மடியக் காரணமானாள்.

உயிர் எப்பொழுது தோன்றியதோ - அப்பொழுதே இறப்பும் அதற்குக் காரணமான பிணியும் தோன்றி விடுகின்றன. ஈண்டு,

“நாளென ஒன்றுபோல் காட்டி உயிர் ஈரும்
வாளது உணர்வார்ப் பெறின்"(334)

என்னும் திருக்குறளும், "சாமாறே விரைகின்றேன்" "வாழ்கின்றாய் வாழாத நெஞ்சமே" (திருச்சதகம் - 14, 10) என்னும் திருவாசகப் பகுதிகளும் ஆய்வுக்கு உரியன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/37&oldid=1203048" இலிருந்து மீள்விக்கப்பட்டது