பக்கம்:தமிழ் அங்காடி.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தர சண்முகனார்  43


பார்த்துக் கொண்டே இருந்தார்கள் என்று உலகியலில் சொல்கிறார்களே-அது இதுதான்.

'தோள் கண்டார் தோளே கண்டார்’ எனும்படி, மிதிலையில், இராமனைக் கண்ட மடந்தையரின் நிலை இங்கே ஒத்து எண்ணத் தக்கது.

இராமனும் சீதையும் முதல் முதலாகக் கண்டு கொண்ட போது, சீதை இராமனின் தோள்களில் கண் பார்வையைச் செலுத்தியதாகக் கூறப்பட்டுள்ள மையும் ஈண்டு எண்ணத் தக்கது.

வஞ்ச மகள்

ஒருதலைக் காமமாகச் சூர்ப்பனகை இராமன் மேல் காதல் கொண்டாள். அரக்கி உருவுடன் சென்றால் இராமன் ஏற்க மாட்டான் என எண்ணி அழகிய கன்னிப்பெண் உரு கொண்டு இராமனை நோக்கி வந்தாள்.

தாமரை மலர் போன்ற சிறிய அடிகளைக் கொண்டு, மொழி பேசும் மயில் போலவும், அன்னம் போலவும், கொடி போலவும், நஞ்சு போலவும், வஞ்சனையுடையவளாகி வந்தாள் என அவளது இயல்பு கூறப்பட்டுள்ளது:

       “பஞ்சி ஒளிர் விஞ்சு குளிர் பல்லவம் அனுங்கச்
       செஞ்செவிய கஞ்சகிமிர் சீறடிய ளாகி
       அஞ்சொல் இளமஞ்ஞை யென அன்னமென மின்னும்
       வஞ்சி யென நஞ்சமென் வஞ்சமகள் வந்தாள்” (31)

பல்லவம் = தளிர். கஞ்சம் - தாமரை. மஞ்ஞை = மயில். தாமரை அனைய சிறிய அடிகளைக் கண்டு, செம்பஞ்சும் குளிர்ந்த தளிரும் தாம் ஒப்பாக முடியாமைக்கு வருந்தினவாம்.

மொழி பேசும் மயில் போன்ற சாயலும் அன்னம் போன்ற அழகிய நடையும் உடையவளாய் வந்தாளாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/45&oldid=1204525" இலிருந்து மீள்விக்கப்பட்டது