பக்கம்:தமிழ் அங்காடி.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44  தமிழ் அங்காடி


சூர்ப்பனகை மொழி பேசக் கூடியவள் ஆதலின், இல்லாத பொருளாகிய மொழி பேசும் மயில் ஒப்புமையாக்கப்பட்டிருப்பது 'இல் பொருள் உவமை அணி' எனப்படும்.

உருவத் தோற்றத்தில் கொடி போன்று இருந்தாளாம். அதாவது, பருத்த அரக்கியர் வடிவை நீக்கிப் பூங்கொடி போன்ற தோற்றத்துடன் அசைந்து அசைந்து வந்தாளாம்.

வெளித் தோற்றம்தான் இப்படி. ஆனால் உள்ளம் நஞ்சாக இருந்ததாம், வஞ்சகர்கள் வெளித் தோற்றத்திற்கு மாறுகோலம் கொள்ளலாம்; ஆனால் உள்ளத்தின் வஞ்சத்தை மாற்ற முடியாதாதலின் 'வஞ்ச மகள்’ எனப் பட்டாள்.

இந்தப் பாடலின் மெல்லோசை நயத்தைத் திரும்பத் திரும்பப் படித்துப் பார்த்தும் பாடிப் பார்த்தும் சுவைக்க வேண்டும்.

வன்மை இயல்புடைய அரக்கி இராமனை மயக்கக் கொண்டுள்ள மென்மைத் தோற்றத்திற்கு ஏற்ற மெல்லோசை வண்ணத்தில் இந்தப் பாடல் அமைந்துள்ளது. உயர்ந்த பாவாணர்களின் பாடல்கள், அவரை அறியாமலேயே கருத்துக்கு ஏற்ற நடையில் அமைந்து விடும். இந்தப் பொருத்தமான அமைப்பைக் கம்பன் பாடல்களில் பல இடங்களில் காணலாம். எனவே, இந்தப் பாடலை இன்னொரு முறை உரக்கப் பாடிப் பார்ப்போம்:-

       “பஞ்சி ஒளிர் விஞ்சுகுளிர் பல்லவம் அனுங்கச்
       செஞ்செவிய கஞ்சகிமிர் சீறடிய ளாகி
       அஞ்சொல் இள மஞ்ஞை யென அன்னமென மின்னும்
       வஞ்சி யென நஞ்சமென வஞ்சமகள் வந்தாள்”.

இந்தப் பாடலைப் பாடும்போதே, கட் புலனால் அறிய முடியாத அவளது மென்மையான வஞ்சகத் தோற்றத்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/46&oldid=1204526" இலிருந்து மீள்விக்கப்பட்டது