பக்கம்:திருவாசகத்தேன்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
மழலையின் கையிலே

பொற்கிண்ணம்!

மாணிக்கவாசகர் துறைதோறும் வளர்ந்தவர். திருவாசகம் ஒரு ஆன்மாவின் பரிணாம வளர்ச்சியைத் தெளிவாகக் காட்டுகிறது. ஆன்மா அதன் பயணத்தை இறைவனின் கருணையினால், கருவூரில் தொடங்குகிறது. திருவூரில் பயணம் நிறைவுறும். பயணம் செவ்வியதாக அமைந்தால் எளிதில் திருவூரை ஆன்மா அடையும். பல ஆன்மாக்கள் தத்தம் விருப்பம் மேவிய தடத்தின் வழியே மட்டும் பயணம் செய்வதன் விளைவாகப் பயணம் நீட்டிக்கவும் செய்யலாம்.

மானிடப் பிறவியின் தகுதிக்கு ஏற்றவாறு வாழ்ந்திடாவிடில் என்ன நிகழும்? மீண்டும் புழுவின் பிறப்பிலிருந்து தொடங்க வேண்டும் என்று அப்பரடிகள் கூறுகின்றார்.

புழுவாய் பிறக்கினும் புண்ணியா
நின்னடி என்மனத்தே
வலுவா திருக்க வரம்தர
வேண்டும் இவ் வையகத்தே
தொழுவார்க்குக் கிரங்கி இருந்தருள்
செய்யா திருப்புலியூர்ச்
செழுநீர்ப் புனற்கங்கை செஞ்சடை
மேல்வைத்த தீவண்ணனே!