பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
5. திருச்சதகம்

திருவாசகத்தில் அமைந்துள்ள முதல் நான்கு அகவல்கள் இறைவனது பெருமை பேசுதல், அவன் அடிகளாருக்கு அருள் செய்தமைபற்றிப் பேசுதல், அவனுடைய எளிவந்த தன்மைபற்றிப் பேசுதல் ஆகிய வற்றை உள்ளடக்கி நின்றன. நான்காவதாகவுள்ள போற்றித் திருஅகவல் ஆன்ம யாத்திரையின் குறிக்கோள், அவன் அருளைப் பெறுதலே ஆகும் என்று அறுதியிட்டுக் கூறிவிட்டு, அந்த அருளைப் பெறுவதற்குரிய வழியையும் 'போற்றி, போற்றி' என்று கூறுவதன்மூலம் எடுத்துக் காட்டுகின்றது.

திருச்சதகம் தொடங்கி, அச்சோப் பதிகம் முடிய உள்ள பகுதிகளில் நான்கு, ஆறு, எட்டு அடிகள் கொண்ட பாடல்கள் இடம் பெற்றுள்ளன. திருச்சதகப் பாடல்கள் நூறும் பத்துப் பத்தாகப் பகுக்கப்பெற்றுள்ளன. இவற்றில் முதல் பத்துப் பாடல்கள் கட்டளைக் கலித்துறையால் அமைந்தவை. அடிகளாருக்கு ஐந்து நூற்றாண்டுகள் முற்பட்டவராகிய காரைக்கால் அம்மையாரே, தம் 'இரட்டை மணிமாலையில்' கட்டளைக் கலித்துறையைப் பயன்படுத்தி உள்ளார். இன்று கிடைக்கின்ற நூல்கள் அளவில் கட்டளைக் கலித்துறையை முதன்முதலாகக் காண்பது அம்மையாரின் பாடல்களிலேயே ஆகும்.

மன உருக்கம், பக்தி இவற்றை வெளியிடுவதற்குக் கட்டளைக் கலித்துறை, எண்சீர்க் கழிநெடில்அடி ஆகிய


இனிவரும் சிந்தனைப் பகுதிகளுள் திருவாசகத்தை மேற்கோளாக எடுத்துக்காட்டும் பொழுது, திருவாசகப் பாடல்களின் தொடர் எண்ணையே தந்துள்ளோம்.