பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


என்னும் சுழற்சியில் சிக்குவதைப் பாடியுள்ளதாகப் பொருள் கொள்வது சிறப்புடையதாகத் தோன்றவில்லை. திருப்பெருந்துறை அனுபவத்திற்கு முன்னர் இப்பாடல் பாடப்பெற்றிருப்பின் அவ்வாறு பொருள்கொள்வதில் தவறில்லை.

திருப்பெருந்துறையில் குருநாதரையும், அடியவர்களையும் பார்த்து, குருநாதரின் திருவடி தீட்சை பெற்ற பின்னர் அதுவே வீடு என்று கருதினார். அந்தத் திருவடிகளைப் பார்த்துக்கொண்டு இருப்பதே வீடுபேறு என்று எண்ணினார். அதாவது, அத்திருவடிகளைச் சதாசர்வ காலமும் ஊனக் கண்களால் கண்டு கொண்டிருப்பதே வீடுபேறு என்று கருதினார். இந்த வீடுபேறு அடிகளாரைப் பொறுத்தவரை மானுட உடலோடு, அந்த உடலுக்குரிய கண்களோடு இருக்கும் பொழுதே கிடைத்த பெரும் பேறாகும். அதனால்தான், மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடுற்றேன் (திருவாச:1-32) என்று முன்னரும் கூறியுள்ளார். இதனைப் பெற்றுவிட்ட பிறகு உடலைத் துறந்து வீடுபேற்றைப் பெற வேண்டும் என்ற பழைய நினைவு நீங்கிவிட்டது.

குருவின் திருவடி தரிசனமே வீடுபேறு என்று நினைத்தார் ஆதலின், எத்தனைத் தலங்களுக்குச் சென்று வழிபட்டபோதும் அவன் குருவடிவாகி வந்த அந்தக் காட்சி அவர் மனத்தை விட்டு அகலவில்லை. நாளாவட்டத்தில் இந்த உடம்பு இருக்கும்பொழுதே, இந்த ஊனக் கண்களால் அந்தக் காட்சியை மறுபடியும் பெற வேண்டும் என்ற அவா வளர்ந்து வளர்ந்து, அவரை ஆட்கொண்டதாகலின் அடியார் வேண்டுதலை நிறைவேற்றும் குருநாதர் திருக்கழுக்குன்றத்தில் அடிகளாரின் விருப்பப்படியே குருநாதர் வடிவில் தரிசனம் தருகிறார். 'பிணக்கிலாத பெருந்துறைப் பெருமான்' என்று தொடங்கி