பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருச்சதகம் * 23


திருக்கோயில் தொண்டில் ஈடுபடவிடாமல் அடிகளாரை உள்ளிருந்து உந்தித் தள்ளுபவன் தில்லைச்கூத்தன் அல்லனோ?

என்றாலும், அடிகளார் எதிர்பார்த்த அளவுக்கு மன உருக்கமும் அவனைப் புகழ்ந்து பாடும் வாய்ப்பும் இன்மையால் 'சாமாறே விரைகின்றேன்' என நொந்து கொள்கிறார்.


19.

வான் ஆகி மண் ஆகி
வளி ஆகி ஒளி ஆகி
ஊன் ஆகி உயிர் ஆகி
உண்மையும் ஆய் இன்மையும் ஆய்
கோன் ஆகி யான் எனது
என்று அவர் அவரைக் கூத்தாட்டு
வான் ஆகி நின்றாயை
என் சொல்லி வாழ்த்துவனே
15

வளி-காற்று. ஊன்-உடல் ஆகுபெயர். கூத்தாட்டுவான்-வினைக்கயிற்றால் அகங்கார மமகாரமுடைய ஆன்மாக்களாகிய பாவைகளை ஆட்டுபவன்.

இப்பாடலில் இரண்டாவது அடியிலுள்ள 'உண்மையுமாய் இன்மையுமாய்' என்பது சிந்திக்கப்படவேண்டிய ஒன்றாகும். உண்மை, இன்மை என்பன முறையே உள்ள பொருள், இல்லாத பொருள் என்ற பொருளையும், உண்டு, இல்லை என்ற பொருளையும் தந்து நிற்பன ஆகும். ஒரு பொருள் உண்டு என்றால், அப்பொருள் இல்லை என்ற மறுதலைக்கு அங்கு இடமில்லை. அதேபோன்று இல்லை என்று கூறிவிட்டால், உண்டு என்ற மறுதலைக்கும் அங்கு இடமில்லை. அப்படியிருக்க இறைவனை ‘உண்மையுமாய்’ என்றும் இன்மையுமாய் என்றும் கூறுவது எவ்வாறு? முற்றிலும் முரண்பட்ட இரண்டை எடுத்துக்கொண்டு, இவை இரண்டுமே இறைவன்தான் என்று சொல்லுகின்ற