பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2



30 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


துணையாகக் கொண்டு உள்ளேயுள்ளே தேடிச் சென்ற போதும் கிட்டாதவனாய், அரியனாய் உள்ளான் என்க. இந்த நுண்மை நிலையை விட்டு, அகண்ட பேரண்டப் பெருவெளியைக் கண் முதலிய பொறிகளின் துணை கொண்டு காண்டல், கருதுதல் முதலிய துறைகளில் சென்று அவனை அறியவோ, தெரியவோ, காணவோ முற்பட்டாலும் அவன் அதிலும் சிக்குவதில்லை. அவன் சிக்குவதில்லை என்ற காரணத்தால் அவன் இல்லையோ என்று நினைந்துவிட வேண்டா. அவன் அம்பரமாய் உள்ளான். அதாவது எங்கும் நிறைந்த பெருவெளியாய் உள்ளான்.

அம்பரம் அல்லது பெருவெளி என்று கூறியவுடன் நம்முடைய பொறி, புலன்களுக்குப் புறத்தேயுள்ள பெரு வெளியையே நினைக்கின்றோம். ஆனால், அகமுகமாக நோக்கத் தொடங்கினால் உள்ளேயும் ஒரு பெருவெளி இருப்பதையும் புறத்தே உள்ள பெருவெளிக்குள்ள அனைத்தியல்புகளும் உள்ளேயுள்ள பெருவெளிக்கும் உண்டு என்பதையும் அறிதல் கூடும். இதனைக் கூறவந்த நம் முன்னோர் 'அண்டத்திலுள்ளது பிண்டத்திலும், பிண்டத்திலுள்ளது அண்டத்திலும் உள்ளது' என்று கூறிப்போயினர். உள்ளத்து உணர்வால் காணமுடியாத போது அகத்தும் புறத்தும் பெருவெளியாய், அம்பரமாய் நிற்கின்றவனை இந்த இரண்டாவது முயற்சியாலும் காணமுடியவில்லை என்கிறார்.

மூன்றாவதாக உள்ளது 'அம்பலத்து எம்பெரியானே' என்பதாகும். அம்பலத்தில் ஸ்தூல, சூக்கும வடிவோடு இறைவன் இருக்கின்றான். மந்திர சொரூபமாகச் சூக்கும வடிவுடன் தில்லையில் உள்ளான். அதே தில்லையில் ஸ்துல வடிவுடன் நட்டம் பயின்றாடும் நாதனாகவும் உள்ளான். அரியனாகவும் அம்பரனாகவும் உள்ள நிலையில் அவனைப் பற்றிக்கொண்டு உறவு கொண்டாட முடியாது.