பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


உருகலாம் அல்லவா? அதுவும் நடைபெறவில்லையே என்று வருந்தும் அடிகளார் ‘நயந்து உருகேன்’ என்றார். இம்மூன்றானும் முறையே மெய், மொழி, மனம் என்பவற்றால் செய்யப்பெறவேண்டியவற்றைக் கூறினாராயிற்று.

'பெரியானே. சிறியேனை ஆட்கொண்ட பெய்கழல்’ என்றதால் இறைவனுடைய எளிவந்த தன்மையைப் பெய்கழலின்மேல் ஏற்றியவாறு காண்க

23.

வேனில் வேள் மலர்க் கணைக்கும்
வெள் நகைச் செவ்வாய்க் கரிய
பாணல் ஆர் கண்ணியர்க்கும்
பதைத்து உருகும் பாழ் நெஞ்சே
ஊன் எலாம் நின்று உருகப்
புகுந்து ஆண்டான் இன்று போய்
வான் உளான் காணாய் நீ
மாளா வாழ்கின்றாயே
19

வேனில் வேள்-மன்தன். பானல்-குவளை.

இப்பாடலின் முதலிரண்டு அடிகள், மனித மனத்தின் இயல்பைக் கூறுகின்றன. பசி, தாகம் போன்ற இயற்கை உணர்ச்சிகளைப்போல் அல்லாமல் பாலுணர்ச்சி மிக ஆழமானதாகும். பசி போன்றவை உணவைப் பெற்றவுடன் அந்த நேரத்திற்கு அடங்கிவிடுதல் கண்கூடு. அவ்வாறின்றிப் பாலுணர்ச்சி எந்த நிலையிலும் அடங்காததாய் மேலும்மேலும் விரிவதாய் இருப்பதை மனவியலார் எடுத்துக் கூறுவர். வயது முதிர்ந்த நிலையிலும் இது மீதுார்ந்து நிற்குமென்பது விசுவாமித்திரன், யயாதி முதலியோர் கதைகளால் நன்கு அறியப்படும்.

இதற்குப் புறநடையாக, எண்பது வயதைக் கடந்த அப்பர் பெருமான் எதிரே, திருப்புகலூரில், அரம்பை