பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருச்சதகம் * 33


ஊர்வசி முதலானவர்கள் வந்து நட்டம் ஆடினபோதும் பெருமானுடைய மனத்தில் எவ்விதச் சலனமும் ஏற்படவில்லை என்ற செய்தி பெரிய புராணத்தில் பேசப் பெற்றுள்ளது.

அனுபவிக்கப்படும் பொருளும் அனுபவிக்கும் ஆற்றலும் இல்லாத நிலையிலும் மனத்தில் இந்த எண்ணப் பேயாட்டம் நடைபெறுவதை மனவியல் அறிந்தவர்கள் கூறுவர். இத்தகைய சராசரி மனித மனநிலையை ஏறட்டுக் கொண்டு பாடிய அடிகளார். இந்த நுணுக்கத்தை நன்கு அறிந்திருந்தமையின் ‘பதைத்து உருகும் பாழ்நெஞ்சே' என்று கூறினார்.

‘பதைத்து உருகும்’ என்ற சொற்கள் சிந்திக்கத் தக்கன. பதைத்தலும் உருகுதலும் காம வயப்பட்ட மனத்திற்கும் பேரின்ப அனுபவத்திற்கும் பொதுவாக அமைந்துள்ளன. இக்கருத்துச் சரியானதே என்பதை விளக்கும் முறையில் இப்பாடலின் மூன்றாவது அடியில் 'ஊன் எலாம் நின்று உருகப் புகுந்து ஆண்டான்' என்று வருவதைக் காண்க அவன் புகுந்து ஆண்டபொழுது ஊனெலாம் நின்று உருகிற்று. இங்கேயும் பரு வடிவினனாக வந்து புகுந்து ஆளவில்லை. அவன் வந்தான் என்பதைக்கூட அறிய முடியவில்லை. அப்படியானால் புகுந்ததையும் ஆண்ட தையும் அடிகளாரால் எவ்வாறு தெரிந்துகொள்ள முடிந்தது? 'ஊனெலாம் நின்று உருக' என்ற தொடர், அவன் ஆண்டபொழுது, அதன் பயனாக விளைந்த மெய்ப்பாட்டைக் கூறுகின்றது.

சராசரி மனிதர்களுக்குப் பாழ் நெஞ்சு பதைத்து உருகுவதற்குக் காரணமாய் இருப்பது மகளிர்மேல் கொண்ட காம இச்சையேயாகும். அந்த இச்சை உள்ளே புகுந்தவுடன் நெஞ்சு பதைத்து உருகிற்று. அடிகளாருக்குக் குருநாதர் அருள் செய்தவுடன் ஊனெல்லாம் நின்று