பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


உருகிற்று. ஒன்று சிற்றின்பத்தால் விளைந்தது, ஏனையது பேரின்பத்தால் விளைந்தது. இவை இரண்டிலும் உருகுதல் பொதுத்தன்மை என்றாலும், நுண்மையான ஒரு வேறுபாட்டையும் அடிகளார் இரண்டு சொற்களில் வைத்துக் காட்டுகின்றார். சிற்றின்பத்தில் நெஞ்சுமட்டும் உருகிற்று. அதுவும் நிலை இல்லாத காம இச்சையால் தோன்றியமையின் நுண்மையான நெஞ்சை மட்டும் உருக்கிற்று. பருப்பொருளான உடலை உருக்கும் ஆற்றல் அதன்பால் இல்லை என்பதை அறிவிக்கப் 'பதைத்து உருகும் பாழ்நெஞ்சே' என்றார். ஆனால், பேரின்ப அனுபவத்தில் ஊனெலாம் நின்று உருக என்றமையின் பருப்பொருளான உடம்பின் உருக்கத்தைக் கூறினார். எனவே, நெஞ்சின் உருக்கம் சொல்லாமலே பெறப்பட்டது. அன்றியும் “நின்று உருக’ என்று கூறியமையின் பேரின்பத்தால் வரும் உருக்கம் நிலைபேறானது என்பதும் பெறப்பட்டது. இதற்குமட்டும் நின்று என்று அடை கொடுத்தமையின் சிற்றின்ப உருக்கம் நிலைபேறுடையதன்று என்பதும் பெறப்பட்டது.

திருப்பெருந்துறையில் பருவடிவுடன் அமர்ந்திருந்த குருநாதர் இவரை ஆட்கொண்டதைச் சுற்றி நின்றோர் அனைவரும் கண்டனர். அவர்களைப் பொறுத்தவரை குருநாதர் என்ற பருவடிவம், திருவாதவூரர் என்ற பருவடிவம் என்ற இரண்டும் இருந்ததை மறுப்பதற்கில்லை. திருவடி தீட்சை செய்தமையின் 'ஆண்டான்' என்று அவர்கள் கருதியதிலும் புதுமையில்லை.

ஆனால், அவர்கள் கற்பனைக்கும் அப்பாற்பட்ட ஒரு நிகழ்ச்சி அங்கு நிகழ்ந்தது என்பதை ஒரு சிறு சொல்லின் மூலம் அடிகளார் விளக்குகிறார். அந் நிகழ்ச்சி யாது? திருவடி தீட்சை செய்து ஆட்கொண்ட வெளிப்படையான நிகழ்ச்சி நடைபெறும்பொழுதே, குரு வடிவில் இருந்த