பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
முன்னுரை

1950ஆம் ஆண்டில் தமிழ்த் தென்றல் திரு. வி. க. அவர்கள், திருவாசகத்தை விஞ்ஞானக் கண்கொண்டு பார்த்து நான் ஓர் உரை காணவேண்டுமென்று பலமுறை துண்டினார்கள். அத்தோடு நில்லாமல் தம்முடைய வாழ்க்கைக் குறிப்பில் என்னைப்பற்றி எழுதிய பகுதியிலும் இக் கருத்தை வெளியிட்டிருந்தார்கள். ஏனைய பக்தி நூல்களினின்றும் திருவாசகம் மாறுபட்டது. இந்நூல் ஓர் இறையன்பரின் அனுபவப் பிழிவு என்ற கருத்தைத் தொடக்கத்திலிருந்தே கொண்டிருந்தேன். வாலாயமாகக் கூறும் பதவுரை, பொழிப்புரை முதலியன இந்நூலுக்கு ஏற்றதல்ல என்ற கருத்தும் என் மனத்தில் வலுவாக இடம் பெற்றிருந்தது. அன்றியும், திருவாசகத்தைப்பற்றி நினைக்கும் போதெல்லாம் ஓர் அச்சஉணர்வு தோன்றியமையால் இம்முயற்சியில் அப்போது ஈடுபடவில்லை.

தமிழ்த் தென்றல் அவர்கள் கூறி நாற்பத்தொன்பது ஆண்டுகள் கழித்து திடீரென்று சில எண்ணங்கள் மனத்தில் தோன்றலாயின. இந்த எண்ணங்களும், அவற்றைத் தோற்று விக்கும் திருவாசக அடிகளும் அடிக்கடி படம்போல் மனத்தில் தோன்றி மறைந்தன. திருவாசக அடிகள் இந்த எண்ணங்களைத் தோற்றுவித்தன என்பது உண்மைதான். ஆனால் அச்சொற்கள், அவை குறிக்கும் பொருள்கள் என்பவை நேரடியாக இவ் எண்ணங்களைத் தோற்றுவிக்க வில்லை. அதன் மறுதலையாக, அச்சொற்கள் குறிப்புப் பொருளாக (suggestion) இவ் எண்ணங்களைத் தோற்று வித்தன. அவ் எண்ணங்களுக்குக் கோவையாக ஒரு வடிவு கொடுக்கும் ஆற்றல் என்பாலில்லை. எனவே, சில அடிகளைப் படித்தவுடன் அத் தொடர்கள் என் மனத்தில் என்ன எண்ணங்களைத் தோற்றுவித்தனவோ அவற்றை