பக்கம்:தில்லைப் பெருங்கோயில் வரலாறு.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சிவமயம்
திருச்சிற்றம்பலம்
1. தில்லைப் பெருங்கோயிலின் தொன்மை


"செல்வ நெடுமாடஞ் சென்று சேணோங்கிச்
செல்வ மதிதோயச் செல்வ முயர்கின்ற
செல்வர் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய
செல்வன் கழலேத்துஞ் செல்வஞ் செல்வமே"

தமிழ்நாட்டிலுள்ள சைவசமயச் சான்றோர்களால் கோயில் என்னும் பொதுப் பெயராற் சிறப்பித்துப் போற்றப் பெறுவது பெரும்பற்றப் புலியூராகிய தில்லைப் பதியாகும். தில்லைத் திருக்கோயிலில் இறைவன் அருவுருவத் திருமேனி கொண்டு எழுந்தருளிய திருமூலட்டானமும், அப்பெருமான் உமையம்மை காண ஐந்தொழில் நாடகம் செய்தருளும் திருச்சிற்றம்பலமும் சைவத்திருமுறையாசிரியர் எல்லோராலும் போற்றி வழிபடப் பெற்ற அருள் நிலையங்களாகும்.

பெரும்பற்றப் புலியூராகிய தில்லைப்பதியில் எல்லார்க்கும் முன்னே தோன்றி, முளைத்த திருமூலட்டானத்திறைவரை வழிபாடு செய்தும், அப்பெருமான் திருவருளால் அம்முதல்வனது ஐந்தொழில் திருக்கூத்தைத் தில்லைச் சிற்றம்பலத்தில் கண்டு போற்றி, இத்திருக்கூத்து. எக்காலத்தும் இடையீடின்றி நிகழுமாறு இறைவனை வேண்டியும் இத்தலத்தில் தங்கி எல்லாம் வல்ல இறைவனை வழிபட்டவர்களில் புலிக்கால் முனிவராகிய வியாக்கிர பாதரும், ஆதிசேடன் அவதாரமாகிய பதஞ்சலி முனிவரும், கூத்தப் பெருமானை இனிய செந்தமிழ்ப் பாடல்களால் பாடிப் போற்றியும் திருத்தொண்டுகள் பல செய்தும் சிவானந்தப் பெரும் பேறெய்திய அடியார்களும் அவர்கள் அருளிய உரைவழி நின்று எண்ணிலாத் திருப்பணிகள் புரிந்த அரசர்களும் படைத் தலைவர்களும் பலராவர். திருமுறைக் காலந்தொட்டு இன்றுவரை தமிழ் மக்களால் சிறப்பு முறையில் வைத்து வழிபடப்பெற்று வருவது இத்திருக்கோயில், இதன் வரலாறுகளை அறிந்து கொள்வது சைவ சமய வளர்ச்சிக்குப் பெரிதும் இன்றியமையாததாகும்.