பக்கம்:தில்லைப் பெருங்கோயில் வரலாறு.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3

கள் மூன்றும் சந்திக்கும் இடமாய் இறைவனது ஆடல் நிகழும் திருவருள் நிலையமாகத் திகழ்கின்றது.

சிவபூமியெனப் போற்றப்படும் இப்பாரத நாட்டிலே சிவம் பெருக்கும் சிறப்புடையது தென்னாடாகிய தமிழ் நாடேயாகும். 'தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி' என வரும் திருவாசகத் தொடர், எண்ணற்ற சிவத் தலங்களைத் தன்பாற் கொண்டு விளங்கும் செந்தமிழ் நாடாகிய தென்னாட்டின் சிறப்பினை நன்கு புலப்படுத்துவதாகும். வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகத்தைத், தொல்காப்பியனார் 'வண்பொழில் மூலர் தண்பொழில் வரைப்பு' என்றார். அவர் காலத்தில் தமிழகம், சேரநாடு, பாண்டிய நாடு, சோழநாடு என மூவகையாகப் பகுக்கப்பெற்றிருந்தது. இம் மூன்று நாடுகளையும் முறையே குடபுலம் தென்புலம் குணபுலம் எனப் பத்துப் பாட்டுள் ஒன்றாகிய சிறுபாணாற்றுப் படை குறிப்பிடுகின்றது. சங்ககாலத்தில் சேரமண்டலம், பாண்டி மண்டலம், சோழமண்டலம் என முப்பெரும் பிரிவாக வகுக்கப்பெற்ற தமிழகம் திருமூலர் காலத்தில் ஐந்து மண்டலங்களாகப் பிரிந்தது. அவற்றுள் சேரநாடு மலைமண்டலம் கொங்குமண்டலம் என இரண்டாகவும், சோழ்நாடு சோழ மண்டலம் தொண்டைமண்டலம் என இரண்டாகவும் பகுக்கப் பெற்றன. சோழநாட்டிற்கும் தொண்டை நாட்டிற்கும் இடையே நடுநாடு என்றதொரு பகுப்பும் பிற்காலத்தில் ஏற்பட்டது. நடுநாட்டின் மேலைப்பகுதி மலயமானாடு எனவும், கீழைப்பகுதி திருமுனைப்பாடி நாடு எனவும் பகுத்துரைக்கப் பெறுவதாயிற்று. இந்நிலையில் சோழநாட்டின் தென்னெல்லையாகத் தென் வெள்ளாறும், வடவெல்லைகளாக மருதையாறும், வடவெள்ளாறும், மேலெல்லையாகக் குளிர் தண்டலையும் (குளித்தலையும்} கொள்ளப்பட்டன.

தமிழகத்தில் தேவார ஆசிரியர்களால் பாடப்பெற்ற சிவத் தலங்களில் மலைநாட்டில் ஒன்றும், கொங்குநாட்டில் ஏழும், பாண்டி நாட்டில் பதினான்கும், சோழநாட்டில் காவிரிக்கு வடகரையில் அறுபத்து மூன்றும், தென் கரையில் நூற்றிருபத்தேழும், ஈழநாட்டில் இரண்டும், நடுநாட்டில் இருபத்திரண்டும்,