பக்கம்:தில்லைப் பெருங்கோயில் வரலாறு.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

13

கடவுளாகிய திருமாலும் படைத்தற் கடவுளாகிய நான்முகனும் இந்திரன் முதலிய தேவர்களும் மூவாயிரவராகிய முனிவர்களும் இறைவன் ஆடியருளிய ஆனந்த நிருத்தத்தினைக்கண்டு மகிழ்ந்து போற்றினார்கள். அத்திருக் கூத்தினைக்கண்டு மகிழ்ந்த பதஞ்சலியும் புலிமுனியும் தாம்பெற்ற பேரின்பத்தினை எல்லோரும் பெறும்படி அருள்புரிதல் வேண்டும் என்று இறைவனை இறைஞ்சி வேண்டிக்கொண்டார்கள். அன்று முதல் தில்லைச் சிற்றம்பலத்திலே இத்திருக்கூத்து என்றும் இடையீடின்றி நிகழும் அனவரத தாண்டவமாக (போது செய்யா நடமாக) நிகழ்ந்து வருகின்றது.

வியாக்கிரபாத முனிவரும் நாகராசாவாகிய பதஞ்சலி முனிவரும் கூத்தப்பெருமான் சந்நிதியிலே பரவசராய்க் கண்களில் ஆனந்தக் கண்ணீர் மல்க நின்றனர். அப்பொழுது கூத்தப்பெருமான் அவர்கள் பாற் கருணை கூர்ந்து 'உங்களுக்கு வேண்டும் வரங்கள் யாவை' எனத் திருவாய் மலர்ந்தருளினார். அந்நிலையில் வியாக்கிரபாத முனிவர் அன்பினால் மனங்கசிந்து தலை மேற் கைகுவித்து நின்று, 'பெருமானே, அடியேன் சிவாகமத்திற் கண்டபடியே முன்புபோல நாள் தோறும் யான் செய்கின்ற பூசனையை உண்மையாக ஏற்றருளுதல் வேண்டும். இது தவிர அடியேன் வேண்டும் வரம் வேறொன்றுமின்று' என விண்ணப்பம் செய்தார். பதஞ்சலி முனிவர் இறைவனை வணங்கி நின்று, ‘எல்லாம் வல்ல பெருமானே, நிலையில்லாத வாழ்க்கையையுடைய ஆன்மாக்கள் கண்களினாலே நின்னை இங்குத் தரிசிக்குந்தோறும் நிறைந்த ஞானவெளியாகிய இச்சபையிலே அன்புருவாகிய உமையம்மையாருடனே இன்று முதல் எக்காலமும் ஆனந்தத் திருக்கூத்தினையாடியருளத் திருவுளம் இரங்குதல் வேண்டும்', என வேண்டிக் கொண்டார். தேவர்கள் தேவனாகிய கூத்தப்பெருமான், முனிவர் இருவரும் வேண்டியவண்ணமே வரமளித்தருளினார். முனிவர் இருவரும் எல்லையில்லாத பெருமகிழ்ச்சியில் திளைத்தார்கள். உடனிருந்த எல்லா முனிவர்களும் ஆனந்த ஆரவாரம் செய்து பரவசமுற்றனர். வானோர் பூமழை பொழிந்தனர்.

நமக்கு விளக்கம் பொருந்திய ஞானமே அம்பலம், மெய்யுணர்வாகிய அது நம்மிற்பிரிவின்றி ஒன்றாயுள்ளது. பேரறிவா