பக்கம்:தில்லைப் பெருங்கோயில் வரலாறு.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

17

கொண்டு நடத்துவிக்கும்படி வசிட்ட முனிவரிடம் வேண்டிச் சுவர்க்கமடைந்தான். மனுவுக்குச் செய்யவேண்டிய ஈமச்சடங்கினை இளைய மைந்தர் இருவரும் செய்து முடித்தனர். வசிட்ட முனிவர் இரணியவன்மனை அழைத்து வருதற்பொருட்டுத் தில்லை வனத்தையடைந்து அதன் வடமேற்குத் திசையிலுள்ள திருக்களாஞ் செடி நிழலில் எழுந்தருளியுள்ள பிரமபுரீசரைப் பூசனை புரிந்தார். அதனையுணர்ந்த வியாக்கிரபாதர் இரணியவன்மனை நோக்கி, 'நாம் பூசையை முடித்துக்கொண்டு வருவோம்; நீ முன் செல்க', எனப்பணித்தருள அவன் முன் சென்று வசிட்ட முனிவரை வணங்கினான்; தன் தந்தை மனு சுவர்க்கமடைந்த செய்தியை வசிட்ட முனிவர் சொல்லக் கேட்டு வருத்தமுற்றான். அந்நிலையில் வியாக்கிர பாதரும் பதஞ்சலியும் அங்கு வந்தனர். முனிவர் மூவரும் இரணியவன்மனுக்கு ஆறுதல் கூறியருளினர்.

வியாக்கிரபாதரும் பதஞ்சலியும் வசிட்ட முனிவரை அழைத்துக் கொண்டு சென்று சிவகங்கையில் நீராடச் செய்வித்துக் கூத்தப் பெருமானையும் திருமூலட்டான முடையாரையும் திருப்புலீச்சுரமுடையாரையும் திருவனந்தீச்சுரமுடையாரையும் வணங்குவித்தனர், வியாக்கிரபாதர் தமது இல்லத்தில் வசிட்டரை அமுது செய்வித்தார்.

மறுநாள் வசிட்ட முனிவருடன் வியாக்கிரபாதரும் பதஞ்சலியும் கூடியிருந்தபொழுது இரணியவன்மன் அவர்கள் மூவரையும் வணங்கி இருந்தனன். அப்போது வசிட்ட முனிவர் வியாக்கிரபாதரை நோக்கி, 'இரணியவன்மனை அழைத்துக் செல்லுவதற்கு இங்கு வந்தேன்' என்றார். அதுகேட்ட வியாக்கிரபாதர் இரணியவன்மனை நோக்கி 'உன் கருத்து யாது?' என வினவினார். அவனும் முனிவரை வணங்கி நின்று, 'அடியேன் பொன்னம்பல வாணர்க்கும் உமக்கும் செய்யும் வழிபாட்டினை யன்றிப் பிறிதொன் றினையும் விரும்பேன்' என்றான். அதுகேட்ட வியாக்கிரபாதர் 'உன் கருத்து இதுவாயின் நீ வசிட்ட முனிலருடனே சென்று அரச முடியையும் இரத்தினம் பொன் முதலிய அரசுடைமைகளையும் யானை குதிரை தேர்