பக்கம்:தில்லைப் பெருங்கோயில் வரலாறு.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

திருமால் மோகினியாகவும் சென்று ஆட்கொள்வதற்கு முன் தாருகா வனத்து முனிவர்கள் இந்த மீமாஞ்சை மதத்தையே மேற்கொண்டு ஒழுகினர் என்பதும், தாங்கள் செய்த அபிசார வேள்வியால் அழிவுறாது சிவபெருமான் நிகழ்த்தியருளிய தாண்டவத்தினைக் கண்டு உள்ளந்திருந்தி இறைவனைவழி பட்டுய்தி பெற்றனர் என்பதும் முன்னர்க்கூறப்பட்டன. மீமாஞ்சை நூல் செய்த சைமினி முனிவர் தமது கொள்கை தவறுடையதென்றுணர்ந்து இச்சிதம்பரத்திலே வந்து தில்லைக் கூத்தப்பெருமானை வணங்கி வேத பாதஸ்தவம் என்ற பனுவலால் இறைவனைத் துதித்துப் போற்றினர். ஸ்தலம்- தோத்திரம்- வேதபாதம்- வேதத்தினடி முதல் மூன்றடிகள் தமது வாக்காகவும் நான்காமடி வேதத் தொடராகவும் அமைய சைமினி முனிவராலே செய்யப்பெற்ற தோத்திரமாதலின் இந்நூல் வேதபாதஸ்தவம் என்னும் பெயருடைய தாயிற்று.