பக்கம்:தில்லைப் பெருங்கோயில் வரலாறு.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

தின்கண் எண்தோள் வீசி நின்று ஆடும் பிரானாகத் தோன்றி அருள்புரிகின்றான் என்பது இக்கலித்தொகைக் கடவுள் வாழ்த்துப்பாடலால் உணர்த்தப் பெறும் உண்மையாகும். இப் பாடலில் குறிக்கப்பெற்ற மூவகைக் கூத்துக்களுள் கொடு கொட்டி என்பது, இறைவன் எல்லா உலகங்களையும் அழித்து நின்று ஆடுதலின் கொடுங் கொட்டி என்னும் பெயருடையதாயிற்று. எல்லாத்தேவரினும் உயர்ந்தவராகிய மகாதேவன் என்னும் இறைவன் அவுணரது முப்புரங்களைத் தீயூட்டி வெற்றிக் களிப்பால் கை கொட்டி நின்று ஆடியது கொடு கொட்டி என்னும் ஆடலாகும். “திரிபுரம் தீமடுத்து எரியக் கண்டு இரங்காது நின்று கைகொட்டி ஆடுதலின் கொடுகொட்டி என்று பெயர் கூறினார்" என்பர் அடியார்க்கு நல்லார். இக்கூத்தினைப் சேரநாட்டிற் பறையூர் என்னும் ஊரில் வாழ்ந்த கூத்தச் சாக்கையன் என்பான் சேரன் செங்குட்டுவன் முன் ஆடிக்காட்டினான் என்ற செய்தியை இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் நடுகற் காதையில் விளக்கியுள்ளார். தேர்முன் நின்ற திசைமுகன் காணும்படி இறைவன் வெண்ணீற்றையணிந்து ஆடியது பாண்டரங்கம் என்னும் கூத்தாகும். முப்புரங்களை வென்று அந்தவலியாலே முப்புரத்து அவுணர்கள் வெந்துவீழ்ந்த வெண்ணீற்றை (சாம்பலை} அணிந்து இறைவன் ஆடுதலினாலே இக்கூத்து பாண்டரங்கம் என்னும் பெயர்த்தாயிற்று எனவும், பாண்டரங்கம் என்பதே பண்டரங்கம் எனத் திரிந்தது எனவும் கருதுவர் நச்சினார்க்கினியர், பாண்டரம் வெண்மை; இங்கு வெண்ணீற்றைக் குறித்தது. வெண்மை வாய்ந்த திருநீற்றை யணிந்து ஆடுதலால் பாண்டரங்கம் என்னும் பெயருடையதாயிற்று. திருவெண்ணீறு பராசக்தியின் வடிவமாம் என்பது, ‘பராவணமாவது நீறு' என வரும் சம்பந்தர் வாக்கால் புலனாகும்.

காபாலம் என்பது சிவபெருமான் பிரமனது தலையைக் கிள்ளி அகங்கையில் ஏந்தி ஆடிய கூத்தாகும். அயனது, மண்டை ஓடாகிய பிரமகபாலத்தைக் கையிலேந்தி ஆடுதலின் இது காபாலம் என்னும் பெயர்த்தாயிற்று. இம்மூன்று கூத்துக்களும் இறைவன் அழித்தற்றொழிலை, நிகழ்த்துங்காலத்தில் ஆடப் பெறுவனவாகும். இச்செய்தி,