பக்கம்:தில்லைப் பெருங்கோயில் வரலாறு.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

31

சிந்தாதபடி அதனை முற்றும் பருகினாள். அதனால் இரத்த வெறி பிடித்த காளி உலக உயிர்களை எல்லாம் அழிக்கத் தொடங்கினாள். அந்நிலையில் எவ்வுயிர்க்குந் தந்தை ஆகிய இறைவன், அவள் முன்னே தோன்றிக் கொடுங்கூத்து இயற்றினான். அக்கூத்தின கடுமையைக் காணப்பெறாத காளி தனது வெறியடங்கி இறைவன் அருளைப் பெற்று அமைதியுற்றாள் என்பது புராண வரலாறாகும். இச் செய்தியினை,

“வென்றிமிகு தாரகன தாருயிர் மடங்கக்
கன்றிவரு கோபமிகு காளிகதம் ஒவ
நின்று நடம் ஆடியிடம் நீடுமலர் மேலால்
மன்றல்மலி யும்பொழில்கொள் வண்டிருவை யாறே”

எனவரும் பாடலில் ஞானசம்பந்தப் பிள்ளையாரும்;

"ஆடினார் காளி காண ஆலங்காட் டடிகளாரே" (4--68-8)

எனத் திருநாவுக்கரசரும் குறித்துப் போற்றியுள்ளமை காணலாம். இவ்வாறு காளியின் இரத்தவெறி தணிய இறைவன் ஆடிய திருக்கூத்து திருவாலங்காட்டில் மட்டுமன்றித் தில்லையிலும் நிகழ்ந்துள்ளது.

தில்லைவன முடையாளாகிய காளி, அவுணரை அழித்த பின்பும் கோபம் தணியாது மன்னுயிர்களை அழிக்கத் தொடங்கவே தில்லைச்சிற்றம்பலப்பெருமான், ஊர்த்துவ தாண்டம் செய்து, காளியின் சினத்தை அடக்கி நீ தில்லையின் வட எல்லையிலே அமர்ந்திருப்பாயாக, என ஆணை தந்தனர் எனவும், ஆடலில் தோற்று நாணிய தில்லைவன முடையாளாகிய காளி இறைவன் பணித்தவாறே தில்லையின் வட வெல்லையிலே கோயில் கொண்டு எழுந்தருளியுள்ளாள் எனவும், தில்லைக் காளியைக் குறித்துப் புராண வரலாறு ஒன்று வழங்கி வருகின்றது. இவ்வரலாறு மாணிக்கவாசகர் காலத்திற்கு முன்பிருந்தே வழங்கும் தொன்மையுடையது என்பது, 'தேன் புக்க தண்பணை சூழ் தில்லைச் சிற்றம்பலவன்' என முன் எடுத்து காட்டிய திருச்சாழற் பாடலாலும்,