பக்கம்:தில்லைப் பெருங்கோயில் வரலாறு.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

33

சிவகங்கைத் தீர்த்தத்தின் நாற்புறமும் அமைக்கப் பெற்ற மண்டபங்களும் கற்படிகளும் சோழமன்னர் காலத்துத் திருப்பணிகளாகும். சிவகங்கை மண்டப உட்சுவர்களிலே பளிங்குக் கற்களைப் பதித்துத் திருவாசகமும் திருச்சிற்றம்பலக் கோவையும் ஆகிய எட்டாந் திருமுறை முழுவதனையும் கல்வெட்டில் வரையச் செய்து பொருத்தியவர் திருப்பனந்தாள் ஸ்ரீகாசி மடத்தின் அதிபர் காசிவாசி தவத்திரு அருணந்தித் தம்பிரான் சுவாமிகள் ஆவர்.

2. கும்ப தீர்த்தம்: இது தில்லைப்பதிக்கு வடகிழக்கே, வெள்ளாறு கடலொடு கலக்குமிடத்தில் அமைந்த கடற்றுறையாகும் ஓர் அசுரனைப் போரில் வெல்லும் உபாயத்தினைக் கற்பிக்கும்படி தேவ குருவானவர் வருண்னிடத்திலே இருட் பொழுதிலே வந்தார். வருணன் அவரைத் தவறாகப் பகைவன் என நினைத்து அவர்மேல் பாசத்தை விடுத்தான். அதனால் குரு இறந்தார். அக்கொலைப்பாவம் காரணமாக ஒரு பிசாசு வடிவம் தோன்றி இரண்டு கால்களிலும் இருகைகளிலும் பொருந்தக் கழுத்தொடு கூடும்படி அவனைக் கட்டிக் கடலில் வீழ்த்தியது, நெடுநாள் கடலிடையே வருந்திக் கிடந்த வருணலுக்குச் சிவபெருமான் மாசிமகத்தில் வெளிப்பட்டு அவனது பாசக்கட்டு அற்றுப்போம்படி அருள் புரிந்தார். அதனால் அக்கடற்றுறை பாசமறுத்த துறை எனப் பெயர் பெற்றது. அத்துறையிலே மாசிமகத்திலே நீராடுபவர்கள் பாசம் நீங்கி முத்தியடையும்படி வருணன் சிவபெருமானிடத்தே வரம் பெற்றான். மகாபாதகனாகிய துர்க்கடன் என்னும் வணிகன் படகில் ஏறிக்கொண்டு மாசிமக நாளில் பாசமறுத்த துறைத்தே வரும் பொழுது படகுடன் தாழ்ந்து முத்திபெற்றான் எனப் புராணம் கூறும்.

3. புலிமடு:- இது தில்லைப் பெருங் கோயிலின் தென் திசையில் அமைந்துள்ள நீர் நிலையாகும். புலிக்கால் முனிவர்க்குத் தந்தையாகிய மத்தியந்தன முனிவர் வழிபட்ட மத்தியந்தனேசுரம் என்னும் திருக்கோயில் இம்மடுவின் மேற்கரையில் அமைந்துள்ளது. இக்கோயில், கல்வெட்டுக்களில் சுடலை யமர்ந்தார் கோயில் எனக் குறிக்கப் பெற்றுள்ளது. இக்கோயிலின் எதிரே அமைந்த புலிமடுவில் இறந்தோர் நற்கதி அடைதற்