பக்கம்:திவான் லொடபட சிங் பகதூர்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திவான் லொடபட சிங் பகதூர்

கிடைக்கும் என்றும், தான் கண்டெடுத்த ரூபாய்க்கு இரண்டு அணா வட்டி சேர்த்து, அதைத் தனியாக வைத்துவிட்டு, பாக்கிப் பணத்தின் ஒரு பாகத்தை மறுநாளைய முதலாக வைத்துவிட்டு, மிச்சமுள்ளதைத் தான் தனது குடும்ப சவரக்ஷணைக்கு உபயோகப்படுத்திக் கொள்ளலாம் என்ற ஒரு யுக்தி நமது சமயற்காரனுக்குத் தோன்றியது.

தனது குடும்பத்தினர் பட்டினி கிடந்து சாகும் தருணத்தில், தான் அவ்விதம் செய்வது தவறாகாது என்று நினைத்து அவ்விதமே செய்யத் தீர்மானித்துக் கொண்ட நம் சமயற்காரன் பணத்தோடு உடனே கடைக்குப் போய்த் தனக்கு வேண்டிய சாமான்களை வாங்கிக் கொண்டு வந்து சேர்ந்து ஒரு நாழிகை நேரத்தில் அவைகளை மைசூர்பாகாக மாற்றித் தனது குழந்தைகள் மனைவி ஆகிய எல்லோருக்கும் சில துண்டுகள் கொடுத்துவிட்டு, மிகுதியிருந்த பெரும் பாகத்தையும் எடுத்துக் கொண்டு, கடைத்தெருவிற்குப் போய் அதிக ஜன நடமாட்டமாயிருந்த ஓரிடத்தில் தனது மிட்டாயியை வைத்துக்கொண்டு ”மைசூர் மகாராஜா சாப்பிடும் புதிய மிட்டாய்!” என்று அதன் புகழைப் பலவாறு எடுத்துக் கூறி அதை விற்க எத்தனித்தான்.

அவ்விடத்திற்கு வந்த பெரியோரும் சிறியோருமான சில ஜனங்கள், அந்தப் புதிய தினுசு மிட்டாயினைப் பார்த்து அளவற்ற ஆச்சரியமும் குதூகலமும் அடைந்தவர்களாய் நெருங்கி இனாமாகக் கொஞ்சம் கொஞ்சம் வாங்கித் தின்னு மாதிரி பார்ப்போரும், அப்போதைக்கப்போது ஒரு காசு கொடுத்து வாங்குவோருமாய் அந்த மிட்டாயின் புதுமையான மணத்தையும் உருசியையும் கண்டு களிப்படைந்து அதைப் பற்றி அபாரமாகப் புகழ்ந்து கொண்டே செல்லலாயினர். மைசூர் பாகின் கீர்த்தி வெகு சீக்கிரத்தில் நாலா பக்கங்களிலும் பரவத் தொடங்கியது. அந்தக் காலத்தில் பணம் கிடைப்பது அரிதாதலால், அப்போது ஒரு பைசாவுக்கு வாங்கியது இப்போது ஒரு ரூபாய்க்கு வாங்கு வதற்குச் சமமாகக் கருதப்பட்டிருந்தது.

ஆகவே, நமது சமயற்காரன் பைசா வியாபாரமாகவே செய்து கொண்டிருந்தான். ஆதலால், இரண்டொரு நாழிகை காலத்தில்

25