பக்கம்:திவான் லொடபட சிங் பகதூர்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திவான் லொடபட சிங் பகதூர்

அங்கே வந்திருந்தோர் சுமார் இருபதின்மரே இருந்தனர். அந்தத் தட்டில் நூற்றுக் கணக்கில் மிட்டாயித் துண்டுகள் இருந்தன வானாலும், அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை வாங்கி வாயில் போட்டுக்கொண்டு, ஒரே விழுங்காய் விழுங்கிவிட்டு, சுற்றிக்கொண்டு இன்னொரு பக்கமாய் வந்து, 'எனக்குக் கொடுங்கள். நான் சாப்பிட்டுப் பார்க்கவில்லை" என்று கூறியபடி பன்முறை வந்து வந்து வாங்கித் தின்று ஐந்து நிமிஷத்திற்குள் மிட்டாயித் தட்டைக் காலி செய்துவிட்டனர். அவர்களது விபரீதமான செய்கையைக்கண்டு அளவற்ற வியப்பும் பிரமிப்பும் அடைந்த நமது சமயற்காரன், "ஐயா எல்லாவற்றையும் சாப்பிட்டு விடுகிறீர்களே" என்று கேட்க வாயைத் திறப்பதற்குள் அவர்கள் பெருத்த ஆரவாரம் செய்து, அத்தனை துண்டுகளையும் தின்றுவிட்டனர்.

அதைக் கண்ட சமயற்காரன் அவர்கள் எல்லோரும் அடக்கு வாரற்றுத் திரியும் துஷ்டர்கள் என்றும், தான் அவர்களிடம் கண்டிப்பாகப் பேசினால் அவர்கள் தனக்கு ஏதாகிலும் தீங்கு செய்வார்கள் என்றும் நினைத்து அஞ்சி நயமாகப் பேசத்தொடங்கி, "ஐயா! இங்கே இருந்த மிட்டாயிகளின் மொத்த விலை ரூபாய் மூன்று ஆகிறது. நான் பரம ஏழை. இதை விற்று இதனால் கிடைக்கும் பணத்தை எடுத்துக்கொண்டு போனாலன்றி, என் வீட்டிலுள்ள என் பெண்சாதியும் பிள்ளைகளும் இறந்து போய் விடுவார்கள். தட்டிலிருந்த மிட்டாயி முழுவதையும் நீங்களே எடுத்துக் கொண்டீர்கள். ஆகையால் தயவு செய்து மூன்று ரூபாய் கொடுத்து விடுங்கள்" என்று பணிவாகக் கேட்க, அவனுக்குப் பக்கத்தில் நின்ற சில முக்கியஸ்தர்கள் புரளியாக நகைத்து, “ஆகா; மிட்டாயிக் கடைக்காரர் பலே கெட்டிக்காரராய் இருக்கிறாரே மாதிரி பார்ப்பதற்காக நீர் எல்லோருக்கும் கொடுத்து வந்ததுபோல எங்கள் ஒவ்வொருவருக்கும் கொடுத்தீர்; அதற் குள்ளாகவே உம்முடைய தட்டு காலியாகிவிட்டது. மிட்டாயி நன்றாக இருக்கிறது என்பதைப்பற்றி ஆட்சேபனையே இல்லை. நீர் இப்போது எவ்வளவு மிட்டாயி கொடுப்பதானாலும், நாங்கள் அதற்குப் பணம் கொடுத்துவிட்டுப் போகிறோம். வேறே எங்கேயாவது இன்னும் மிட்டாயி வைத்திருந்தால், போய் அதை

27