பக்கம்:திவான் லொடபட சிங் பகதூர்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திவான் லொடபட சிங் பகதூர்

சமயற்காரன் "எஜமானே! அவர்கள் சுமார் இருபது மனிதர்கள் இருந்தார்கள். எல்லோரும் என்னைச் சுற்றிக்கொண்டு இருந்தார்கள். மற்ற கடைக்காரர்கள் எல்லோரும் பக்கத்தில் இல்லை; அவர்கள் என்னுடைய பொருளை அபகரித்துக்கொண்டு போன பிறகு நான் பக்கத்திலிருந்த சில கடைக்காரர்களிடம் போய் இந்த விஷயத்தைச் சொன்னேன். அவர்கள் 'அடடா, நாங்கள் கவனிக்க வில்லையே! யாரோஜனங்கள் வந்து பணம் கொடுத்து மிட்டாயி வாங்கிக் கொண்டு போகிறார்கள் என்றல்லவா நாங்கள் நினைத்தோம். அவர்கள் யாரென்று கூட நாங்கள் கவனிக்கவில்லையே!” என்று சொல்லிவிட்டார்கள்; ஆகையால், என்னைத்தவிர இதற்கு வேறே சாட்சிகள் யாரும் இல்லை." என்றான்.

அதைக்கேட்ட திவான் "என்ன ஐயா! உம்முடைய பிராது, மகா விசித்திரமாக இருக்கிறதே! ஒருவர் தமக்கு மற்றவர் ஏதாவது கெடுதல் செய்துவிட்டதாகப் பிராது கொடுத்தால், எழுத்து மூலமான ஆதாரத்தைக் கொண்டோ, அல்லது, தக்க மனிதர்களின் சாட்சியத்தைக் கொண்டோ, அவர் தம்முடைய பிராது உண்மையானது என்று ஸ்தாபிக்க வேண்டுமென்றும், அப்படி ஸ்தாபித்தால் நியாயாதிபதி அதற்குத் தக்க பரிகாரம் செய்து கொடுக்க வேண்டு மென்றும் சட்டம் பரிஷ்காரமாகச் சொல்லுகிறது. அவர் மாத்திரம் சொல்வது போதுமானதல்ல, நீர் சொல்வது ஒருவேளை உண்மையாக இருக்கலாம். இருந்தாலும், அதை மாத்திரம் வைத்துக் கொண்டு நான் உமக்கு அநுகூலமாகத் தீர்ப்புச்செய்வது உசித மாகாது. ஏனென்றால் இதுபோலவே, வேறு பலர் தமக்கு விரோதிகளாயிருப்பவர் மீது பொய்ப்பிராது கொண்டுவரத் துணிவார்கள். அதற்கெல்லாம் இடம் கொடாமல் சட்டம் அமைக்கப். பட்டிருக்கிறது. ஆகையால் நான் சட்டப்படி உம்முடைய பிராதைத் தள்ளுவதைத் தவிர வேறு எதையும் செய்வதற்கில்லை" என்றார்.

அதைக் கேட்ட சமயற்காரன் "ஐயா! தாங்கள் சொல்வது நியாயமே. ஆனாலும் இப்படி வலியவர்கள் பலர் கும்பலாக வந்து எளியவர்களிடமுள்ள சொத்துக்களை அபகரித்துக் கொண்டே போனால், எளியவர்களுக்கு சட்டத்தில் பாதுகாப்பு என்பதே கிடையாதா?" என்றான். திவான், "அது வேறே சங்கதி; நகரத்தில் போலீஸார் முதலிய உத்தியோகஸ்தர்கள் இருக்கிறார்கள். அவர்கள்-

34